உதயநிதி கைதால் டென்ஷன்.. தஞ்சை தனியார் பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை...!
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு தஞ்சாவூருக்கு அழைத்து செல்லப்பட்டதை அடுத்து, அங்குள்ள சில தனியார் பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களை பற்றி அவதூறாக பேசிய புகாரின் பெயரில் இன்று காலை சென்னையில் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின், சட்டப்பூர்வ நடவடிக்கை மற்றும் விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனிடையே, அவரிடம் விசாரணை நடத்திவிட்டு இன்றே அவர் விடுதலை செய்யப்படுவார் என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது.
இருப்பினும், உதயநிதி ஸ்டாலின் தஞ்சைக்கு கொண்டுவரப்படுவதையொட்டி அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தஞ்சையில் உள்ள சில தனியார் பள்ளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று திடீரென விடுமுறை அளித்துள்ளன.
ஏற்கனவே பள்ளிக்கு வந்து சேர்ந்த மாணவ-மாணவிகளை உடனடியாக பள்ளிகளுக்கு நேரில் வந்து பெற்றோர்கள் அழைத்து செல்லுமாறு பள்ளி நிர்வாகங்கள் தரப்பில் அவசர தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. திடீர் விடுமுறை அறிவிப்பு காரணமாக பெற்றோர்கள் மத்தியில் சிறிது பதற்றம் ஏற்பட்டாலும், பொது அமைதி மற்றும் பாதுகாப்பிற்காகவே இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Edited by Siva
