புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 10 ஜூன் 2023 (09:07 IST)

அண்ணாமலை அறிக்கை எதிரொலி: முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட்..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை எதிரொலியால் முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் என்பவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
 
நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ‘டெல்லியில் நடைபெறவிருக்கும் பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தமிழகம் சார்பாக அணியை தேர்வு செய்யாமல், தமிழக பள்ளிக் கல்வித் துறை தமிழக மாணவர்களைப் புறக்கணித்தது குறித்து, கடந்த ஐந்தாம் தேதி அன்று கேள்வி எழுப்பியிருந்தோம். 
 
அது குறித்து ஊடகங்களில் செய்தியாக வந்தும், தமிழக பாஜக,  தமிழக அரசுக்கு இதுகுறித்து மீண்டும் நினைவூட்டிய பிறகும், இத்தனை நாட்களும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்து விட்டு, இன்று, முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் மீது கண்துடைப்பு நடவடிக்கை எடுத்து, தான் பணியில் இழைத்த தவறை மறைக்கப் பார்க்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.  
 
பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் பொறுப்பின்மையை மறைக்க, அரசு அதிகாரிகளைப் பலிகடாவாக்கி, தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பிரகாசிக்கும் கனவுடன் இருந்த பள்ளி மாணவர்களின் கனவுகளைக் கலைத்திருப்பது நியாயமா? பள்ளிக் கல்வித் துறை அமைச்சரே இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
 
இந்த அறிக்கை வெளியான சிலமணி நேரங்களில் பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், ‘தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் கலந்து கொள்வது தொடர்பாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கை மீது, முறையாக நடவடிக்கை எடுக்காத முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யபடுகிறார். கடிதத்தை முறையாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்காததால், இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்று கூறியுள்ளார்.
 
Edited by Mahendran