”நாம் அனைவரும் வெட்கி தலைகுனிய வேண்டும்”.. ஸ்டாலின் வருத்தம்
விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதற்காக நாம் வெட்கி தலைகுனிய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னையிலுள்ள பிரபல ஷாப்பிங் மாலில் கழிவு நீர் தொட்டியில் அடைப்பு எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, ஷாப்பிங் மால் உரிமையாளர்கள், நிர்வாகிகள், ஒப்பந்தகாரர் ஆகியோர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், “விஷவாயு தாக்கி கடந்த 1993 முதல் இன்று வரை 206 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. நம் அனைவருக்கும் இது தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது” என கூறியுள்ளார்.
மேலும் ”மனிதர்களை இத்தகைய தொழிலில் ஈடுபடுத்தக் கூடாது என்பதே திராவிட இயக்கக் கொள்கை” எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.