பாஜகவிடம் அடிபணிந்த அதிமுக: ஸ்டாலின் விமர்சனம்!
தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆகியவை இணைந்து பாஜக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்த தீர்மானம் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த, நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. வாக்கெடுப்பில் 451 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில், மத்திய அரசுக்கு எதிராக 126 உறுப்பினர்களும், ஆதரவாக 325 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியான அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இதனை விமர்சித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், நீட் தேர்வு, 15 வது நிதி ஆணையம், ஜிஎஸ்டி, இந்தி திணிப்பு மற்றும் வகுப்புவாத அரசியல் அனைத்திற்கும் அதிமுக அரசு எதற்காக அடிபணிந்தது என்பது, தற்போது பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்ததன் மூலம் தெளிவாகிறது.
இதன்மூலம், வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் தங்கள் குறிக்கோளை அடைந்ததாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.