வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 20 ஜூலை 2019 (14:23 IST)

ஆளுநர் பதவியே தேவையில்லாதது – சட்ட சபையில் ஸ்டாலின் கருத்து !

ஏழுபேர் விடுதலை தொடர்பான விவாதத்தின் போது ஆளுநர் பதவியே தேவையில்லாத ஒன்று என ஸ்டாலின் கூறியுள்ளார்.

1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். அந்த குண்டு வெடிப்பில் அவரோடு சேர்த்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் என மொத்தம் 14 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் ஆகிய ஏழுப் பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற தமிழக சட்டமன்றம் எடுத்த முடிவை உச்சநீதிமன்றம் ஏற்றது. இதையடுத்து அவர்கள் ஏழு பேரும் 27 ஆண்டுகளை சிறையில் வாழ்ந்துவிட்டதால் அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென தமிழகம் முழுவதிலும் இருந்து குரல்கள் எழுந்தன. இது சம்மந்தமாக தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ஏழுபேரின் விடுதலை தொடர்பாக ஆளுநரே முடிவெடுத்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

ஆனால் தமிழக அரசு இரண்டுமுறை சட்ட தீர்மானம் இயற்றி அதை ஆளுநருக்கு அனுப்பியும் ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார். இது பற்றிய விவாதம் இன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற போது திமுக தலைவர் ஸ்டாலின் ‘7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு அனுப்பிய தமிழக அமைச்சரவையின் தீர்மானம் எந்த நிலையில் உள்ளது. ஏன் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரம் முடிவே இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது” என்று கேள்வி எழுப்பினார். மேலும் ஆளுநர் பதவி என்பது தேவையில்லாத ஒன்று என்பதில் திமுக இன்னமும் உறுதியாக உள்ளது’ எனக் கூறினார்.