கர்நாடகத்தை எதிர்த்து போராடும் நிலையில் அண்ணா பல்கலை.க்கு கன்னடர் துணைவேந்தரா? ஸ்டாலின் காட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்தும், காவிரி மேலாண்மை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் கர்நாடக அரசை எதிர்த்தும் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதிலும் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற பந்த் போராட்டத்தின்போது கர்நாடக பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
மேலும் கர்நாடகத்தின் வாட்டாள் நாகராஜ், தமிழகத்தின் பேச்சை கேட்டு காவிரி வாரியம் அமைத்தால் புரட்சி வெடிக்கும் என்றும் ரஜினி, கமல் படங்களை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர்கள் இருவரும் கர்நாடகத்திற்கு வருவதையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறி வருகிறார்
இந்த நிலையில் எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதை போல நேற்று அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா என்பவர் துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவில் நேற்று கவர்னர் கையெழுத்திட்டுள்ளார். இந்த நடவடிக்கையால் தமிழக அரசியல் தலைவர்கள் கொதித்தெழுந்துள்ளனர்.
இதுகுறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தபோது, 'சூரப்பாவை நியமனம் செய்தது மண்ணின் மைந்தர்களாக உள்ள கல்வியாளர்களை இழிவுபடுத்தும் செயல். காவிரி விவகாரத்தில் தமிழகமே போர்க்கோலம் பூண்ட நிலையில், சூரப்பா நியமனத்தை ஏற்க முடியாது என்றும் தமிழக பல்கலைகழக வளாகங்களை காவி மயமாக்க வேண்டாம் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்