திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (14:10 IST)

அழகிரிக்கு கடும் எதிர்ப்பு : தீவிர ஆலோசனையில் ஸ்டாலின்

திமுகவில் மீண்டும் அழகிரியை சேர்க்கக் கூடாது என எதிர்ப்புகள் வலுத்து வருவதால் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
திமுவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி தொடர்ந்து ஸ்டாலினின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால், கருணாநிதியின் உடல் பின்னடைவை சந்தித்த போது, இறுதி நிகழ்வு வரை ஸ்டாலினுடன் சேர்ந்து அவர் இணக்கமாக செயல்பட்டார். எனவே, அவருக்கும், ஸ்டாலினுக்கும் இடையேயான பிளவு சரியாகிவிட்டது என பலரும் நினைத்தனர். 
 
அதேபோல், கட்சியில் அழகிரி விரைவில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார் எனவும், அவருக்கு முக்கிய பதவி அளிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. 
 
இந்நிலையில்தான், இன்று காலை கருணாநிதியின் நினைவிடத்திற்கு வந்த அழகிரி, கட்சி தொடர்பான தனது ஆதங்கத்தை தலைவரிடம் கொட்டினேன் எனவும், தனது ஆதங்கம் பற்றி 2 அல்லது 3 நாட்களில் சொல்கிறேன் எனவும் கூறி திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 
நாளை கூடும் செயற்குழுவில், பொதுக்குழுவிற்கான தேதி அறிவிக்கப்படும். அந்த கூட்டத்தில், திமுகவின் தலைவராக ஸ்டாலின் பதவி ஏற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இந்த நிலையில்தான் அழகிரியின் பேட்டி திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது என திமுக பொதுச்செயலாளரும், பேராசிரியருமான அன்பழகன் கருதுவதாக தெரிகிறது. அழகிரியை 2 முறை கட்சியிலிருந்து தலைவர் கருணாநிதி நீக்கினார். கடைசிவரை, அவரை மீண்டும் கட்சியில் அவரை இணைத்து கொள்வது பற்றி அவர் யோசிக்கவே இல்லை. எனவே, தற்போது அழகிரியை கட்சியில் சேர்த்தால் அது கருணாநிதியின் எண்ணத்திற்கு எதிராக செய்ல்பட்டது போல் ஆகிவிடும் என அவர் ஸ்டாலினும் கூறியதாகவும், அதை ஸ்டாலின் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 
 
அதேபோல், ஸ்டாலினுக்கு நெருக்காமான துரைமுருகன் உள்ளிட்ட பலரும் அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அழகிரியால் நமக்கு எந்த பலனும் இருக்கப்போவதில்லை. அவரின் ஆதரவாளர்கள் பலரும் தற்போது நம் பக்கம் வந்து விட்டனர். கோபத்தில் அழகிரி தனிக்கட்சி தொடங்கினாலும், அவர் பின்னால் யாரும் செல்ல மாட்டார்கள். மேலும், அவரால் கட்சியை திறமையாக நடத்தி செல்லவும் முடியாது. அவர் மீண்டும் அவர் கட்சியில் சேர்க்கப்பட்டால் மதுரையில் மீண்டும் அவரது ஆதரவாளர்களின் ஆட்டம் தொடங்கிவிடும். இது கட்சிக்கு கெட்ட பெயரைத்தன் ஏற்படுத்தும். எனவே, அவரை சேர்க்க வேண்டாம் என அவர்கள் ஸ்டாலினிடம் தெளிவாக விளக்கியுள்ளதாக தெரிகிறது.
 
ஆனால், அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். அவர் இல்லாமல் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது திமுகவிற்கு பின்னடவை ஏற்படுத்தும் என்பது அழகிரியின் ஆதரவாளர்களின் கருத்தாக இருக்கிறது. 
 
எனவே, குடும்பத்தினர் மற்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் ஸ்டாலின் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது.