புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: புதன், 9 அக்டோபர் 2019 (11:07 IST)

”திமுக ஆட்சிக்கு வந்தால்”..சூடுபிடிக்கும் இடைத்தேர்தல், நாங்குநேரியில் ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம்

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து, நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முக ஸ்டாலின் திண்ணை பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

வருகிற 21 ஆம் தேதி நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக, திமுக, காங்கிரஸ், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் களமிறங்கியுள்ளன.

இந்நிலையில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பாக ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் நாங்குநேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதில் தொகுதி மக்களுடன் கலந்துரையாடிய அவர், கடந்த திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நல திட்டங்கள் குறித்து பேசினார், பின்பு கை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறினார்.

அதன் பின்பு ”மக்களை பற்றி சிந்திக்காத ஆட்சி தான் தமிழகத்தில் நடந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் தான், விவசாயிகளும் பெண்களும் மேம்பாடு அடைய முடியும் என கூறினார்.

நாங்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுகவுக்கு ஆட்சி மாற்றத்திற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. அதிமுகவிற்கு ஆட்சியின் மீதான மக்களின் நம்பிக்கைக்கான பலபரிட்சையாக பார்க்கப்படுகிறது. ஆதலால் இந்த இடைத்தேர்தல் சூடுபிடிக்கும் நிகழ்வாக அமையப்போவதில் எந்த சந்தேகமும் இல்லை.