வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 28 டிசம்பர் 2022 (23:04 IST)

வியட்நாமிலிருந்து தாயகத்துக்கு அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள் - குடிவரவு அதிகாரிகள் விசாரணை

Srilanka
இலங்கை பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட நிலையில், நாட்டை விட்டு வெளியேறி, சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கனடா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில், வியட்நாமில் மீட்கப்பட்ட இலங்கையர்களில் 151 பேர் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர்.
 
வியட்நாமிலிருந்து விசேட விமானத்தின் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இவர்கள், இன்று அதிகாலையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
 
இவ்வாறு தாயகம் திரும்பியவர்கள், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஹங்சிகா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
 
நாடு திரும்பியவர்கள் மத்தியில், 9 பெண்களும் அடங்குவதாக அவர் கூறியுள்ளார்.
 
நாடு திரும்பிய விருப்பம் தெரிவித்த நிலையிலேயே, இவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
 
சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறி, கடல் மார்க்கமாக கனடா நோக்கி பயணிக்க முயற்சித்து, வியட்நாமில் மீட்கப்பட்ட மேலும் இலங்கையர்கள் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
அகதிகளுக்காக சர்வதேச அமைப்பு, வெளிவிவகார அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இலங்கை போலீஸாரின் தலையீட்டில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை நாளுக்கு நாள் எதிர்நோக்கி வருகின்ற பொருளதார நெருக்கடி காரணமாக, நாட்டிலிருந்து வெளியேறுவோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றது.
 
அதேபோன்று, சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாகவும், வெளிநாடுகளை நோக்கி இலங்கையர்கள் செல்கின்றனர்.
 
 
நடுக்கடலில் தவித்த இலங்கையர்கள்
 
இவ்வாறு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிய 303 இலங்கையர்கள், மியன்மார் வழியாக கனடா நோக்கி செல்ல முயற்சித்திருந்தனர்.
 
இவ்வாறு கடல் மார்க்கமாக சென்றுக்கொண்டிருந்த தருணத்தில், அவர்கள் பயணித்த கப்பல் விபத்துக்குள்ளாகியிருந்தது.
 
இதையடுத்து, இந்த விடயம் தொடர்பில் இலங்கை கடற்படையின் மீட்பு மையத்திற்கு அறிவிக்கப்பட்டது.
 
சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடற்படை மீட்பு மையங்களுக்கு, இலங்கை கடற்படை தகவல்களை பரிமாறியுள்ளது.
 
இலங்கை கடற்படையின் தகவலை அடுத்து, விரைந்து செயற்பட்ட சிங்கப்பூர் அதிகாரிகள், அகதிகளுடன் மூழ்கும் அபாயத்திலிருந்த கப்பலை கண்டுபிடித்துள்ளனர்.
 
இது குறித்து, இந்த கப்பலுக்கு அருகாமையில் பயணித்த ஜப்பானுக்கு சொந்தமான கப்பலொன்றிற்கு கடந்த நவம்பர் மாதம் 7ஆம் தேதி தகவல் பரிமாற்றப்பட்டதை அடுத்து, குறித்த அகதிகள் ஜப்பானுக்கு சொந்தமான கப்பலினால் மீட்கப்பட்டு, வியட்நாம் அதிகாரிகளிடம் நவம்பர் மாதம் 08ம் தேதி ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
 
அகதிகளை தாம் பாதுகாப்பாக மீட்டதாக சிங்கப்பூர் அதிகாரிகள், இலங்கை கடற்படைக்கு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்ததாக இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியது.
 
இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்களே அதிகளவில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
 
பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்தவர்கள், தமது பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்து, அதனூடாக கிடைத்த பயணத்தை கொண்டு சட்டவிரோதமாக கனடா நோக்கி செல்ல தயாராகியுள்ளனர்.
 
இந்த நிலையில், அமெரிக்க தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தும் தமிழ் மொழி பேசக்கூடிய பிரதான முகவர் ஒருவரின் உதவியுடன், ஏனைய முகவர்களின் ஒத்துழைப்புடனும் இவர்கள் இவ்வாறு அகதிகளாக கனடாவை நோக்கி செல்ல முயற்சித்துள்ளனர்.
 
கனடா செல்லும் அகதி ஒருவரிடமிருந்து தலா 5000 அமெரிக்க டாலர் அறவிடப்பட்டதாக கப்பலில் பயணித்த அகதியின் சகோதரன் பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார்.
 
குறித்த இலங்கையர்கள் உரிய வகையில் விஸாக்களை பெற்று, விமானத்தின் மூலம் ஒன்றரை மாதத்திற்கு முன்பாக மியன்மார் நோக்கி பயணித்துள்ளனர்.
 
முகவரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட 5000 அமெரிக்க டாலரின் ஊடாக, விமான பயணச் சீட்டுக்கள், விஸா உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்துக்கொடுக்கப்பட்டதாக அவர் கூறுகின்றார்.
 
இந்த நிலையில், மியன்மார் நோக்கி சென்ற இலங்கையர்கள், அங்கிருந்து கடந்த ஒக்டோபர் மாதம் 10ம் தேதி கனடா நோக்கிய தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
 
சுமார் 28 நாட்கள் கடல் சீற்றம் உள்ளிட்ட  பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பயணித்த குறித்த கப்பலில், அண்மையில் தூவாரமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இதையடுத்து, கப்பலுக்குள் நீர் பிரவேசித்துள்ள நிலையில், கப்பல் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அறிய முடிகின்றது.
 
இந்த நிலையிலேயே, குறித்த கப்பலில் பயணித்த அகதிகள், இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
 
இதையடுத்தே, குறித்த படகில் பயணித்த அகதிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
 
வியட்நாமிலுள்ள முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதி ஒருவர் கடந்த நவம்பர் மாதம் 23ம் தேதி உயிரிழந்திருந்தார்.
 
நாடு திரும்ப விருப்பமில்லாத நிலையில், இரண்டு இலங்கையர்கள் முகாமிற்குள் கடந்த நவம்பர் மாதம் 18ம் தேதி தற்கொலை முயற்சியை மேற்கொண்ட பின்னணியில், அவர்கள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
 
இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர்;, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
இலங்கைக்கு மீள அனுப்பும் முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வந்த நிலையில், தன்னால் மீண்டும் தாயகத்துக்குத் திரும்ப முடியாது என்று கூறி அந்த அகதி உயிரை மாய்த்துக் கொண்டதாக வியட்நாம் முகாமிலுள்ள மற்றொரு அகதி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
 
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான சுந்தரலிங்கம் கிரிதரன் என்ற 4 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.
 
உயிரிழந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் அண்மையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, இறுதிக் கிரியைகள் நடத்தப்பட்டிருந்தன.
 
வியட்நாமிலுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள எஞ்சிய இலங்கையர்களில் பலர், மீள இலங்கைக்கு திரும்ப முடியாது என கூறி வருவதாக தெரிய வருகின்றது.
 
எனினும், ஏனையோரையும் நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
இலங்கைக்கு வருகைத் தந்தவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.