சபரிமலையில் மண்டல பூஜை.. தமிழகத்தில் இருந்து 60 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள்..!
சபரிமலையில் இன்னும் இரண்டு மாதங்களில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜை நடைபெற இருப்பதை அடுத்து, அடுத்த 60 நாட்களுக்கு தமிழகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தின் சார்பில் நவம்பர் 15ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி வரை, அதாவது அடுத்த 60 நாட்களுக்கு, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவை முன்னிட்டு, சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து சாதாரண பேருந்து, படுக்கை வசதி பேருந்து, மிதவை பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையிலும் பல்வேறு நகரங்களில் இருந்து சபரிமலைக்கு செல்லும் வசதியும் உண்டு என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இந்த பேருந்துகளில் முன்பதிவு செய்ய http://tnstc.in என்ற இணையதளத்தை அணுகலாம் என்றும், TNSTC என்ற செயலி மூலம் முன்பதிவு விவரங்களை அறியலாம் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
சபரிமலை செல்லும் பக்தர்கள் அடுத்த 60 நாட்களில் இந்த சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Edited by Siva