கைபேசியை நற்செயலுக்கு மட்டும் பயன்படுத்துங்கள் மாணவர்களுக்கு எஸ்பி மணிவண்ணன் அறிவுரை!
வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில், குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இந் நிகழ்வில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் தலைமை வகித்தார்.
அப்போது பேசிய கண்காணிப்பாளர் மணிவண்ணன்.......
இன்று கைபேசி என்பது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் உதவிகரமாக உள்ள நிலையில், அதில் உள்ள சில தகவல் பரிமாற்ற வசதிகள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் தடைக்கல்லாகவும் அமைந்துள்ளது.
எனவே, கைபேசியை மாணவர்கள் நற்செயலுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். அதில் உங்கள் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ள பதிவுகளை, வசதிகளை, தேவையற்ற தகவல் பரிமாற்றங்களை நீங்கள் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.
அதில்
உள்ள சில நல்ல தகவல்களை உள்வாங்கிக் கொண்டு கல்வியில் வளர்ச்சி அடையுங்கள். இந்த இளம் வயதில் உங்கள் சிந்தனைகளை, எண்ண ஓட்டங்களை கல்வியில் மட்டுமே செலுத்துங்கள். தவறான வழிகாட்டும் நண்பர்களுடன் சேர்வதை அறவே தவிர்த்துடுங்கள். பொதுவாக கிராமப்புற மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமாக உள்ளது. அதை நீங்கள் தூக்கியெறியுங்கள். மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் வேண்டாம்.
கடின உழைப்பு, அதன் மூலம் பெறும் கல்வி அறிவே உங்களின் செயல்பாடாக அமையவேண்டும். நாங்கள் படிக்கும் காலங்களில் நல்ல நூல்களைத் தேடி அலைந்து, திரிந்தோம். ஆனால், தற்போதைய நிலைமை வேறு. உங்களுக்குத் தேவையான அனைத்து நூல்களும் இணைய தளத்தில் கொட்டிக் கிடக்கிறது. அமர்ந்த இடத்திலிருந்தே அவற்றை தேடி கண்டுபிடித்து படியுங்கள்.
பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் போற்றுங்கள். நீங்கள் எதுவாக மாற விரும்புகிறீர்களோ, அதுவாக மாறலாம் என்றார் இதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன இதில் குடியாத்தம் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி திருவள்ளுவர் பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாபு ஜனார்த்தனம், டிஎஸ்பிக்கள்- கே.ஹரி (போதைப்பொருள் தடுப்புப் பிரிவு), எம்.டி.இருதயராஜ் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு), குடியாத்தம் DSP ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.