செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 23 செப்டம்பர் 2020 (12:14 IST)

போலீஸ் பெயரில் ஃபேக் ஐடி, பண மோசடி! – வேலையை காட்டிய கார்டு மேல 14 நம்பர் க்ரூப்!?

திருச்சி போலீஸ் அதிகாரிகள் பெயரில் போலி பேஸ்புக் ஐடி தொடங்கி பண மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி டிஎஸ்பி செந்தில்குமார் பெயரில் பேஸ்புக்கில் இயங்கி வந்த போலி ஐடி ஒன்று அவரது நட்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு மெசெஞ்சரில் தொடர்பு கொண்டு பண உதவி தேவைப்படுவதாக கூறி ஆன்லைன் மூலமாக பணம் பெற்றுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த செந்தில்குமார் தனது பெயரில் யார் பணம் கேட்டாலும் தர வேண்டாம் என தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதுடன், நெருக்கமான நண்பர்களுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார்.

டிஎஸ்பி மட்டுமல்லாது வேறு சில காவலர்களின் பெயரிலும் போலி ஐடி உருவாக்கி மர்ம கும்பல் பலரிடம் பணம் மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தங்களுடன் தொடர்பில் உள்ள பலரையும் எச்சரித்த காவல் துறையினர், பணம் அனுப்பியவர்களிடம் இருந்து மர்ம கும்பலின் கூகிள் பே கணக்கு உள்ள போன் எண்ணை தொடர்பு கொண்டுள்ளனர்.

இந்தியில் பேசிய அந்த கும்பல் உஷாராகி போனை கட் செய்துள்ளனர். செல்போன் சிக்னல் ஆந்திர பகுதிகளில் காட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக டெபிட் கார்டு நம்பரை கேட்டு அழைக்கும் வட இந்திய மோசடி கும்பல் போன்ற ஒரு கும்பலாக இது இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.