வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 25 பிப்ரவரி 2021 (21:57 IST)

ஆல்பாஸ் அறிவிப்புக்கு குவியும் எதிர்ப்புகள்: என்ன காரணம்?

9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து என்றும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பிலிருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த போதிலும் சமூக ஆர்வலர்கள் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்
 
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் உச்சத்தில் இருந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பது நியாயமானது. ஆனால் தற்போது தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் குறைந்து விட்டது. அது மட்டுமின்றி அனைத்து பேருந்துகள் ரயில்கள் ஓடத்தொடங்கிவிட்டன, கடைகள் திறப்பு, திரையரங்குகள் திறப்பு என்பது உள்ளிட்ட அனைத்து விதமான இயல்புநிலை திரும்பிய பின்னரும் தேர்வுகளை மட்டும் ரத்து என்ற அறிவிப்பு முழுக்க முழுக்க அரசியல் என்றும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காகவே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் 
 
ஆனால் அதே நேரத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டாக ஆன்லைனில் மட்டுமே பாடங்களை படித்து உள்ளதால் பல மாணவர்களுக்கு பாடங்கள் புரியவில்லை என்றும் இதனால் திறமையான மாணவர்கள் கூட தேர்வு வைத்தால் தோல்வி அடையும் வாய்ப்பு இருப்பதாகவும் அந்த நிலைமையில் இருந்து முதல்வர் தப்பிக்க வைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்