கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சிவக்குமார், அமைச்சர் உதயநிதி இரங்கல்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.
அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்..
இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு மூத்த நடிகர் சிவக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், ''தமிழ்நாடு அரசியலில் எம்.ஜி.ஆரை அடுத்து நம்பிக்கையான ஒரு தலைவராக உருவாகிக் கொண்டிருந்தவர். ஆயிரக்கணக்கான தன் ரசிகர்களை மாதம் ஒருமுறை கோபி படப்பிடிப்பின்போது சந்தித்ததை பார்த்துள்ளேன். தி நகர் ரோகிணி லாட்ஜியில் உள்ளள தன் அறையில் நண்பர்களை தங்கவிட்டு, படப்பிடிப்பு முடிந்து வந்து வெராண்டாவில் அவர் உறங்குவார். சாமந்தி பூ படத்தில் என்னோடு சிறு வேடத்தில் நடித்தார். புதுயுகம் படத்தில் என் உயிர் நண்பராக நடித்தார். கலையுலகம், அரசியல் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டது.சூர்யா, கார்த்தியுடன் என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:
தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
சிறந்த மனிதநேயர் - துணிச்சலுக்கு சொந்தக்காரர் - தமிழ்த்திரையுலகின் தவிர்க்கவியலா நாயகராக திகழ்ந்தவர் - முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது அவருக்கும் , அவர் மீது கலைஞர் அவர்களுக்கும் இருந்த பேரன்பை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அன்புக்குரிய நண்பர்.
நடிகர் சங்கத் தலைவராகவும் - எதிர்க்கட்சித் தலைவராகவும் திறம்பட செயல்பட்ட கேப்டன் அவர்களின் இழப்பு, தமிழ்த்திரையுலகிற்கும் - அரசியல் உலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மரணத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் - தே.மு.தி.க தொண்டர்கள் - நண்பர்கள் - திரையுலகினருக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.என்று தெரிவித்துள்ளார்.