சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்திடம் விசாரணை: தேர்தல் அதிகாரி அதிரடி
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே வாக்களித்த நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
சென்னையில் தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்யபிரத சாகு அளித்த பேட்டியில், "வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரத்தில் குற்றப்பதிவு செய்ய வேண்டி உள்ளது. அதற்கான உரிய விசாரணையை நடத்த வேண்டி உள்ளது. எனவே அதில் காலதாமதம் ஆகலாம்.
அதன் பிறகு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தண்டனை விதிக்கப்படும். அதில் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கையை தேர்தல் ஆணையம்தான் உறுதி செய்யும்.
தற்போது அந்த விவகாரத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரிக்கிறார். அவரிடம் இருந்து அறிக்கை பெறப்படும். அலுவலர்கள் செய்த தவறு வரிசையாக பட்டியலிடப்படும். அதுபற்றி சம்பந்தப்பட்ட அலுவலரின் பதில் பெறப்படும்.
அதற்கான விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுதான் விசாரணை நடத்தப்படும். அனைத்து நடைமுறையையும் பின்பற்றித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் இந்த பிரச்சினையில் காலதாமதம் ஏற்படும்.
விசாரணை அதிகாரி அந்த நடிகர்களை சாட்சியாக விசாரிக்க முடியும். அலுவலர்கள் சொல்வது சரியா என்பதை நடிகர்கள் கூறும் கருத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். முதலில் குற்றப் பதிவு செய்யப்படும். இரண்டாவதாக, விசாரணை அதிகாரி நியமிக்கப்படுவார். மூன்றாவதாக, விசாரணை அதிகாரியின் அறிக்கை, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு அவர் தகுந்த தண்டனையை விதிப்பார். அந்தத் தண்டனையை தேர்தல் ஆணையம் உறுதி செய்யும். இதுதான் நடைமுறை என்று கூறியுள்ளார்.