இன்று டெல்லியில் ஜிஎஸ்டி (GST Council Meet) கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி (GST - Goods and Service Tax) எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு பொருட்களுக்கும், சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றங்கள் அவ்வபோது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டு முடிவு செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று 54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக ரூ.2 ஆயிரத்திற்கும் மேல் செய்யப்படும் பணப்பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணம் வசூலிப்பது குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் ஆயுள் காப்பீடு தவணை கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வரும் நிலையில் அதுகுறித்த ஆலோசனைகளும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K