ஆண்களுக்கும் இலவச பயணம்!.. மனைவியோடும், காதலியோடு ஊர் சுற்றலாம்!.. ராஜேந்திர பாலாஜி கலகல!...
2021 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு பேருந்துகளில் மகளிர்க்கு இலவச பயணங்கள் அறிவிக்கப்படும் என தேர்தல் பரப்புரையில் திமுக கூறியிருந்தது. சொன்னது போலவே முதல்வர் மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழகமெங்கும் ஒரு குறிப்பிட்ட கிலோமீட்டர் தூரத்தில் செல்லும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். தினமும் பல லட்சம் பேர்கள் பயணம் செய்து வருவதாக திமுக அரசு மார்தட்டி வருகிறது. வருகின்ற தேர்தலில் இதை பிரச்சாரத்திலும் பயன்படுத்த திமுக திட்டமிட்டிருக்கிறது.
இந்நிலையில்தான், அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்களுக்கும் இலவச பயணம் என சமீபத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதற்கு சீமான் போன்றவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதுபற்றி கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெண்களுக்கு மட்டும் இலவச பயணத்தை அறிவித்து ஒன்றாக இருந்த குடும்பத்தை திமுக அரசு பிரித்துவிட்டது. மனைவியோடும், காதலியோடும் இலவசமாக பயணித்து ஜாலியக சினிமாவுக்கு செல்லலாம்.. ஊர் சுற்றலாம் என்பதற்காகத்தான் ஆண்களுக்கும் இலவச பயணத்தை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார் என சொல்லி கலகலப்பூட்டியிருக்கிறார்.