தவெக + காங்கிரஸ் கூட்டணி உறுதி.. ராகுல் காந்தி திட்டவட்ட முடிவா?
2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் பெரும் மாற்றங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி உருவாகுமா என்ற கேள்வி தற்போது விவாத பொருளாகியுள்ளது.
சமீபத்தில், விஜய்யின் ஜனநாயகன் திரைப்பட தணிக்கை விவகாரத்தில், மத்திய அரசை கடுமையாக விமர்சித்து ராகுல் காந்தி வெளியிட்ட பதிவு இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. "மத்திய அரசின் முட்டுக்கட்டைகள் தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்" என ராகுல் காந்தி குறிப்பிட்டதை, தவெக தரப்பு ஒரு "நட்பு ரீதியான சைகையாக" வரவேற்றுள்ளது.
திமுக கூட்டணியில் 'அதிகாரப் பகிர்வு' கோரிக்கையை முன்வைத்து வரும் காங்கிரஸுக்கு, திமுக தலைமை பிடி கொடுக்காத சூழலில், விஜய்யுடன் காங்கிரஸ் கைகோர்க்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், தமிழக காங்கிரஸ் மேலிடம் தற்போது வரை "திமுகவுடனான கூட்டணி 200 சதவீதம் உறுதியானது" என்றே கூறி வருகிறது. ஆனால், வரும் ஜனவரி 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகே ராகுல் காந்தியின் இறுதி முடிவு தெரியவரும்.
தவெக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே மதச்சார்பின்மையில் ஒத்த கருத்து கொண்டிருப்பதால், ஒருவேளை இந்தக் கூட்டணி அமைந்தால் அது தமிழகத்தின் திமுக vs அதிமுக என்ற அரசியலை மாற்றி அமைக்கும் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்கும்.
Edited by Siva