ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 11 ஜனவரி 2024 (10:52 IST)

செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை.. ! வருமானவரித்துறை அதிரடி நடவடிக்கை..!!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார், உறவினர் மற்றும் நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில்  வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
 
குறிப்பாக,  அமைச்சர் செந்தில் பாலாஜியின்  நெருங்கிய நண்பர் கொங்கு மெஸ் மணியின்  கரூர்  கொங்கு மெஸ் மற்றும் நிதி நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தினர். சோதனையில் பல்வேறு ஆவணங்கள், சொத்து ஆவணங்கள், கணினி ஹார்டுடிஸ்க் ஆகியவற்றை கைப்பற்றிச் சென்றனர். 
 
அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜாமீன் கேட்டு பல முறை விண்ணப்பித்து வருகின்றனர்.  ஜாமீன் மீதான மனு விசாரணை நிறைவடைந்த நிலையில் நாளை தீர்ப்பு வரவுள்ளது.
 
இந்நிலையில் நேற்று கரூர் வந்த வருமானவரித்துறை சொத்து மதிப்பீட்டு குழுவினர் செந்தில் பாலாஜி நெருங்கிய நண்பர் கொங்கு மெஸ் மணி அவரது அலுவலகம், புதிதாக கட்டி வரும் கட்டிடத்தில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம்நகர் பகுதியில் புதிதாக கட்டி வரும் பங்களாவில் வருமானவரித்துறை சொத்து மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
 
இரண்டு கார்களில் வந்த 7 அதிகாரிகள் தற்போது அளவீடு செய்து ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் முகாமிட்டு ஆய்வு பணியில் ஈடுபட்டு வரும் சம்பவம் கரூரில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.