திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 14 மார்ச் 2017 (15:14 IST)

தேர்வு அறைக்கு கேமராவோடு சென்ற விவகாரம் - சர்ச்சையில் சிக்கிய செங்கோட்டையன்

தேர்வு எழுதும் பள்ளி அறைகளுக்கு, புடை சூட கேமராவோடு சென்ற அமைச்சர் செங்கோட்டையன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


 

 
ஜெ. இருந்த போது, அதிமுகவில் இருந்து விலகியிருந்த செங்கோட்டையன், சசிகலா அணி அதிமுகவை கைப்பற்றிய பின், மீண்டும் அதிமுகவில் தலைகாட்டினார். சசிகலாவின் ஆதரவாளராக தன்னை காட்டிக் கொண்டார். மாஃபா பாண்டியராஜன், ஓபிஎஸ் அணிக்கு சென்ற பின், அவர் வகித்து வந்த கல்வி அமைச்சர் பதவி செங்கோட்டையனுக்கு அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில், அடுத்தடுத்து செய்திகளில் அவர் அடிபட்டு வருகிறார். அவர் கல்வி அமைச்சராக பதவியேற்ற நாளில்,  பெண் நிருபர் ஒருவர் அவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட போது அதற்கு பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து நழுவி சென்றார். அதை சமூகவலைத்தளங்களில் பலரும் கிண்டலடித்தனார்.
 
இந்நிலையில் மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த 2ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கியது. இந்நிலையில் தேர்வு பணிகளை ஆய்வு செய்ய அமைச்சர் செங்கோட்டையன் சில அதிகாரிகளுடன் சென்னை எழும்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். அவரோடு அனைத்து டிவி கேமரா மேன்களும் அழைத்து செல்லப்பட்டனர். 
 
தேர்வு அறைக்குள் கேமராமேன்கள் புகுந்து வீடியோ எடுப்பது, படம் எடுப்பது, தேர்வு எழுதும் மாணவியரை எழுந்து நிற்க வைத்து அமைச்சர் பேசுவது என பல காட்சிகள் வெளியே கசிந்தது. இதைக் கண்டு பல பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். தேர்வு எழுதும் அறைக்கு செங்கோட்டையன் சென்றதால், சுமார் 20 நிமிடங்கள், மாணவியர் அவதிப்பட்டிருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
 
விளம்பரம் தேடும் நோக்கத்தில் செங்கோட்டையன் செய்த செயல், தேர்வு எழுதும் மாணவியருக்கு தொந்தரவு கொடுத்துள்ளதாக பலரும் வாட்ஸ்-அப் போன்ற சமூகவலைத்தளங்களிலும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.