செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: ஞாயிறு, 4 ஜனவரி 2026 (17:00 IST)

தவெக கூட்டணிக்கு யாரெல்லாம் வராங்க?!.. செங்கோட்டையன் சொல்லிட்டாரே!...

sengottaiyan
நடிகர் விஜய் இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கினார். கட்சி துவங்கியதும் விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய விஜய் ‘எங்களோடு கூட்டணியில் இணைபவர்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும்’ என கூறியிருந்தார்.

இது தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி அமைக்கும் முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக இரண்டுமே இப்படி இதுவரை சொன்னதே இல்லை. இப்படி அறிவித்தால் சின்ன கட்சிகள் நம்முடன் கூட்டணி வைக்கும் என விஜய் எதிர்பார்த்தார்.

ஆனால் இதுவரை தவெகவுடன் யாரும் கூட்டணி வைக்கவில்லை. அதேபோல் விஜயும் அதிமுக-பாஜக கூட்டணியில் இணையவில்லை. அதேநேரம் விஜய் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என நினைக்கிறார்.அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ், டிடிவி தினகரன் என மூன்று பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது. எனவே அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் சொன்னபோது அவரை கட்சியிலிருந்து நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி. இதையடுத்து அவர் தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

மேலும், எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருக்கும் பலரையும் தவெகவில் இணைக்கும் முயற்சியில் செங்கோட்டையன் ஈடுபட்டிருக்கிறார். ஏற்கனவே அவர் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் நெருக்கமாக இருப்பதால் கண்டிப்பாக அவர்களை அவர் தவெக கூட்டணியில் இணைப்பார் என எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள்.

இந்நிலையில், ஒரு விழாவில் பேசிய செங்கோட்டையன் ‘தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் இடம் பெறுவார்கள். யாரெல்லாம் தவெக கூட்டணிக்கு வருவர்கள் என்பதை பொங்கல் வரை பொறுத்திருந்து பாருங்கள்’ என சொல்லியிருக்கிறார்.