1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 மே 2024 (16:39 IST)

பாகிஸ்தானை விட இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகம்: செல்வப்பெருந்தகை

Selvaperundagai
பாகிஸ்தானை விட இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் இரு மடங்கு அதிகமாக இருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுகுறித்து  அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று 2014 தேர்தல் பரப்புரையில் வாக்குறுதி வழங்கி நரேந்திர மோடி பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கொடுத்த வாக்குறுதியின் படி 10 ஆண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும்.
 
ஆனால் 2023 டிசம்பர் இந்திய பொருளாதார கண்காணிப்பு மைய அறிக்கையின் படி 40 கோடியே 20 லட்சம் பேர் நிரந்தர வேலை இல்லாமல் உள்ளனர். பாகிஸ்தானை விட இந்தியாவில் இருமடங்கு வேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது. இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 23 சதவீதமாகவும், பாகிஸ்தானில் 12 சதவீதமாகவும் இருக்கிறது. வடமாநிலங்களில் வேலையில்லா திண்டாட்ட பாதிப்பு கடுமையாக இருப்பதால் பாஜக ஆட்சிக்கு இளைஞர்களிடையே எதிர்ப்பு கடுமையாக இருக்கிறது.
 
இந்தியாவில் மொத்தம் 23 இந்திய தொழில்நுட்ப கழங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. 1960-களில் பிரதமர் நேரு ஆட்சியில் இந்திய தொழில்நுட்ப கழகங்கள் சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் தொடங்கப்பட்டன . இதில் படித்து பட்டம் பெற்றவர்களுக்கு வேலை உறுதியாக கிடைக்கிற சூழல் இருந்து வந்தது.
 
ஆனால் மோடி ஆட்சியில் அந்த வாய்ப்பு இழக்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கிடைத்த தகவலின்படி 2024 ஆம் ஆண்டில் படித்த 21,500 ஐ.ஐ.டி. மாணவர்களில் 13,400 பேருக்கு தான் வளாகத் தேர்வில் வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மீதியுள்ள 8,100 மாணவர்களுக்கு, அதாவது 38 சதவீத மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.
 
இரண்டாண்டுகளுக்கு முன்பு வேலை கிடைக்காதவர்களின் எண்ணிக்கை 3,400 ஆக இருந்தது. தற்போது 8,100 ஆக உயர்ந்திருக்கிறது. குறிப்பாக டெல்லி ஐஐடி யில் கடந்த 5 ஆண்டுகளில் 22 சதவீத மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. மொத்தத்தில் 2024 கணக்கின்படி 40 சதவீத ஐஐடி மாணவர்கள் நாடுமுழுவதும் வேலையில்லாமல் இருந்து வருகிறார்கள்.
 
சமீப ஆண்டுகளில் ஐஐடி மாணவர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு இல்லாத நிலை காரணமாக ஏற்படுகிற மன உளைச்சலினால் கடந்த ஓராண்டில் 6 ஐஐடி மாணவர்கள் பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர் . வேலை கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம், பொருளாதார பாதிப்பு, ஏழ்மையான குடும்பச் சூழல் ஆகியவற்றின் காரணமாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள்.
 
அதேபோல் பொறியியல் கல்லூரிகளில் படித்து வெளி வருகிற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத நிலை உருவாகி வருகிறது. அதிலும் குறிப்பாக பொறியியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்பு படித்த மாணவர்களில் 67 சதவீதத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை எனறு ஒன்றிய அரசு மூலம் கிடைத்த ஆர்.டி.ஐ. தகவல் உறுதி செய்கிறது.
 
ஐஐடி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்பு படித்தவர்களிடையே உருவாகி வருகிற வேலையில்லா திண்டாட்டம் இதுவரை காணாத ஒன்றாகும் . அதுவும் தேசிய அளவில் தரம் வாய்ந்த முன்னணி கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவது படித்த இளைஞர்களிடையே பதட்டமான சூழல் உருவாக்கி இருக்கிறது, எதிர்காலமே கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. இத்தகைய அவலநிலைக்கு 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார பேரழிவு தான் காரணமாகும்.
 
இந்திய பொருளாதாரத்தை உலக நாடுகளின் வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருந்து 3 ஆவது இடத்திற்கு உயர்த்துவேன் என்று பேசுகிற பிரதமர் மோடியின் ஆட்சியில் 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுவதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் அடிக்கடி அறிக்கைகளை வெளியிட்டு புள்ளி விபரங்ககளை கூறி வருகின்றன. ஆனால் பாஜக ஆட்சியாளர்கள் அதை பொருட்படுத்துவதில்லை.
 
ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்தல் பரப்புரைக்கு போகிற போது அந்த மாநிலத்திற்கு ஏற்ற வகையில் 4 பொதுக்கூட்டங்களில் பங்கேற்றால் 4 விதமான ஆடம்பர ஆடைகளை உடுத்துவதும், பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பது குறித்து கொஞ்சம் கூட கவலைப்படாமல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் மீது ஆதாரமற்ற, மிக மிக இழிவான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதற்கு மக்களிடையே வரவேற்புக்கு மாறாக கடும் எதிர்ப்பு தான் உருவாகி வருகிறது .
 
இதன்மூலம் மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி 2019 தேர்தலில் பெற்ற வெற்றியை போல 2024 தேர்தலிலும் வெற்றிபெற்று விடலாம் என்று மோடி கனவு காண்கிறார். ஆனால் நாட்டு மக்களோ வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்சனை ஆகியவற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் மோடி ஆட்சிக்கு உரிய பாடத்தை புகட்டி, 2004 பொதுத்தேர்தலில் இந்தியா ஒளிர்கிறது என்ற வாஜ்பாயின் பிரச்சாரத்தை புறக்கணித்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்ததை போல, மீண்டும் நாட்டு மக்கள் இண்டியா கூட்டணியை ஆதரிப்பது உறுதியாகி வருகிறது. இதன் மூலம் மோடி ஆட்சி நிச்சயம் அகற்றப்படும் என்ற செய்தி தான் ஐந்து கட்ட தேர்தல் கணிப்புகள் கூறுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran