திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 8 அக்டோபர் 2017 (14:20 IST)

அந்த ஸ்லீப்பர் செல் செல்லூர் ராஜூ? - எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி

சசிகலா தொடர்பாக அதிமுக அமைச்சர்கள் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வருவது ஆளும் எடப்பாடி அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பொதுக்குழுவில் சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது என எடப்பாடி பழனிச்சாமி அணி அறிவித்து விட்டாலும், சசிகலாவிற்கு ஆதரவாக அவ்வப்போது சில அமைச்சர்கள் தொடர்ந்து கருத்து கூறியே வருகின்றனர்.
 
பரோலில் இருந்து சசிகலா வெளியே வந்தால், அவரை நேரில் சென்று சந்திப்பேன் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் சமீபத்தில் கருத்து தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டென்ஷன் கொடுத்தார். ஆனால், அமைச்சர்கள் யாரும் அவரை சென்று சந்திக்க மாட்டார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் கூறினர். அவர்கள் கூறியது படியே எந்த அமைச்சரும் இதுவரை சசிகலாவை நேரில் சந்தித்து பேசவில்லை.
 
இந்நிலையில், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு, சசிகலாவை புகழ்ந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு குடைச்சல் கொடுத்துள்ளார்.  ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அதிமுக ஆட்சி அமைய பாடுபட்டவர் சசிகலா. ஆனால், என்னுடை விருப்பு வெறுப்புகளை அடக்கிக்கொண்டு ஜெ.வின் பிள்ளையாக இருக்கிறேன். நான் கூறும் கருத்துகள் முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோருக்கு பாதகமாக இருக்கக் கூடாது” என ஒரு விழாவில் பேசியுள்ளார்.
 
இதையடுத்து, இப்போதுதான் ஸ்லீப்பர் செல்களில் ஒருவர் ஒருவராக வெளியே வருகிறார்கள். செல்லூர் ராஜூ தனது மனசாட்சிப்படி பேசியிருக்கிறார் என தினகரன் அணியில் இருக்கும் சி.ஆர்.சரஸ்வதி கருத்து தெரிவித்துள்ளார். எடப்பாடி அணியில் எங்கள் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள் என ஏற்கனவே தினகரனும் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
சசிகலாவை பாராட்டி செல்லூர் ராஜூ தெரிவித்துள்ள கருத்து எடப்பாடி தரப்பிற்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது.