சசிகலாவை அமைச்சர்கள் சந்திப்பார்களா? - வெல்லமண்டி நடராஜன் அதிரடி பதில்
பரோலில் வெளிவந்துள்ள சசிகலாவை அதிமுக அமைச்சர்கள் யாரும் சந்திக்க மாட்டார்கள் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியுள்ளார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவர் நடராஜனை சந்திப்பதற்காக சசிகலா 5 நாட்கள் பரோலில் வெளியே வந்துள்ளார். தற்போது அவர் சென்னை தி.நகரில் உள்ள அவரது உறவினர் இளவரசிக்கு சொந்தமான வீட்டில் தங்கியுள்ளார். நேற்று காலை அவர் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ள குளோபல் மருத்துவமனைக்கு சென்று அவரை நலம் விசாரித்தார்.
வீடு மற்றும் மருத்துவமனை தவிர வேறு எங்கும் செல்லக்கூடாது மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என பல்வேறு நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், மற்றவர்கள் விரும்பினால் அவரை சந்தித்து பேசலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.
எனவே, சில அதிமுக அமைச்சர்கள் அவரை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர் சந்திப்பில் சசிகலா பரோலில் வந்தால் அவரை சென்று சந்திப்பேன் எனக் கூறியிருந்தார். ஆனால், அப்படி நடக்காது என அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், புதுக்கோட்டையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் “ ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நாங்கள் யாரும் பார்க்கவில்லை. அவரது மரணம் குறித்த விசாரணை கமிஷன் எங்களை அழைத்தால் உண்மையை கூற தயாராக இருக்கிறோம். அதேபோல், பரோலில் வெளிவந்துள்ள சசிகலாவை அமைச்சர்கள் சந்திக்க மாட்டார்கள்” என தெரிவித்தார்.
இதன் மூலம் அதிமுக அமைச்சர்கள் யாரும் சசிகலாவை சந்திக்க மாட்டார்கள் என்பது உறுதியாகியுள்ளது.