1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (14:35 IST)

மனித கழிவுகளை அகற்றவும், சாக்கடைகளை சுத்தம் செய்யவும் இயந்திரங்கள் - சீமான்!

கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்ய இயந்திரங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்ய சீமான் வலியுறுத்தல். 

 
மதுரை நேதாஜி நகரில் கழிவுநீர் தொட்டிக்குள் மோட்டார் பழுது பார்க்க போது விஷ வாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: 
இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 
 
மதுரையில் மாநகராட்சி கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்த போது நச்சுக்காற்று தாக்கி 3 ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். உயிரிழந்த மூவரில் மதுரை மாடக்குளம் பகுதி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அன்புத்தம்பி சரவணனும் ஒருவர் என்ற செய்தி துயரத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.
 
கழிவு நீர்த்தொட்டிகளைச் சுத்தம்செய்ய இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டுமென்று தொடர்ந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். இருந்தும் அதுகுறித்து ஆளும் அரசுகள் எவ்வித அக்கறையும் செலுத்தாது, அலட்சியம் செய்ததன் விளைவே தற்போது மேலும் மூன்று உயிர்கள் பறிபோக முக்கியக் காரணமாகும். எனது நாட்டில் மனிதக் கழிவுகளை அள்ளவும், பாதாளச் சாக்கடையைத் தூய்மைப்படுத்தவும், மனிதர்கள் இறங்கி தங்கள் கைகளால் செய்ய வேண்டி இருப்பதென்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத பெருங்கொடுமையாகும். 
 
ஒவ்வொருமுறையும் கழிவு நீர்த்தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி உயிரிழப்பதும், அரசு நிதியுதவி அளிப்பதோடு கடந்து செல்வதும் தொடர்கதையாகிவிட்டது. ஆகவே, தமிழ்நாடு அரசு இதற்கு மேலாவது விழிப்படைந்து, மனிதக் கழிவுகளை அகற்றவும், பாதாளச் சாக்கடைகளைச் சுத்தம் செய்யவும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதைத் தீவிரமாகக் கண்காணித்து உறுதிசெய்ய வேண்டுமெனவும், சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவோருக்குச் செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்ட நவீன உடைகள் உட்பட அனைத்துப் பாதுகாப்புக் கருவிகள் வழங்கப்பட வேண்டுமெனவும், மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ள பணியமர்த்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
 
மேலும், தற்போது மதுரை மாநகராட்சி கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியின்போது உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கும் தலா 1 கோடி ரூபாயை துயர் துடைப்பு உதவியாக வழங்க வேண்டுமெனவும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.