புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (17:56 IST)

சனி, ஞாயிறுகளில் பள்ளி – ஜாக்டோ ஜியோப் போராட்ட எதிரொலி !

கடந்த ஜனவ்ரி 22 முதல் 9 நாட்களாகப் பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராடினர். அதன் பின்னர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு இப்போது பள்ளிகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் நீக்குதல், 7ஆவது ஊதியக் குழுவின் 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் ஆகியக் கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ கடந்த 9 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வந்தனர். அதனால் பெரும்பாலானப் பள்ளிகள் இயங்காமல் இருந்தன.

மாணவர்களூக்கு தேர்வுகள் தொடங்க இருப்பதாலும் அடுத்த வாரம் முதல் செய்முறைத் தேர்வுகள் நடக்க இருப்பதாலும் ஆசிரியர்கள் தற்போது தற்காலிகமாக 9 நாள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். மீண்டும் பிப்ரவரி இறுதியில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜாக்டோ ஜியோப் போராட்டத்தால் இயங்காமல் போன அந்த 9 நாட்களையும் ஈடுகட்டும் வகையிலும் மாணவர்களுக்கான விடுபட்டுள்ளப் பாடங்களை நடத்தி முடிக்கவும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வாரநாட்களில் சிறப்பு வகுப்புகளும் எடுக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.