செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (20:06 IST)

அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம்; அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் எழுத்து பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது.


 

 
அனிதா மரணத்துக்கு நீதி கோரியும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை அனுமதிக்க கூடாது என வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி பொது நல வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
 
விசாரணை நடத்திய நீதிமன்றம் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போரட்டம் நடத்த அனுமதி கிடையாது என உத்தரவிட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது உச்ச நீதிமன்றம் எழுத்து பூர்வமாக அளித்துள்ள உத்தரவில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நீட் தேர்வுக்கு மாற்று கருத்தையோ, கண்டனங்களையோ சட்ட ஒழுங்குக்கு பாதிப்பு இல்லாமல் அமைதியான முறையில் தெரிவிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெளிவாக எழுத்து பூர்வமான உத்தரவை பிறப்பித்துள்ளது.