1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 4 ஜூலை 2017 (12:45 IST)

சசிகலாவின் அரசியல் ஆட்டம் தொடரும்: நடராஜன் ஆருடம்!

சசிகலாவின் அரசியல் ஆட்டம் தொடரும்: நடராஜன் ஆருடம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தபின்னர் தனது இரண்டாவது அரசியல் ஆட்டத்தை தொடங்குவார் என அவரது கணவர் நடராஜன் கூறியுள்ளார்.


 
 
ஜெயலலிதா இருந்த போது அவருக்கு அரசியலில் உறுதுணையாக இருந்தவர் அவரது தோழி சசிகலா. சசிகலாவை தாண்டி தான் ஜெயலலிதாவை சந்திக்க முடியும் என்ற நிலை இருந்தது. அமைச்சர்கள் மற்றும் கட்சியினர் ஜெயலலிதாவுக்கு கொடுக்கும் மரியாதையை சசிகலாவுக்கும் கொடுத்து வந்தனர். ஆனால் அவர் நேரடி அரசியலில் இறங்காமல் ஜெயலலிதாவின் முதுகுக்கு பின்னால் இருந்து கொண்டு அரசியலில் ஈடுபட்டார்.
 
இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா நேரடி அரசியலில் இறங்கினார். ஆனால் சிறிது காலத்திலேயே அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல அவரது அரசியல் வாழ்க்கை சிறைக்குள் முடங்கி போனது. சசிகலா சிறையில் இருந்து 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து வெளியே வந்தால் அரசியலில் ஈடுபடலாம் ஆனால் தேர்தலில் போட்டியிட மேலும் 6 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
 
இப்படி சசிகலாவின் இரண்டாவது அரசியல் களம் கேள்விக்குறியாக உள்ளபோது அவரது கணவர் நடராஜனிடம் இது குறித்து பிரபல தமிழ் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் ஒருவர் தனது பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
நான்கு ஆண்டு கால சிறைத் தண்டனை முடிந்து திரும்பிய பின் சசிகலாவின் இரண்டாவது அரசியல் ஆட்டம் தொடங்குமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த நடராஜன், நான்கு ஆண்டு காலம் அல்ல, அவர் அதற்கு முன்பே திரும்பலாம். நிச்சயம் அவரது அரசியல் ஆட்டம் தொடரும், இதில் சந்தேகமும் வேண்டாம் என கூறியுள்ளார்.