திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 30 அக்டோபர் 2017 (10:47 IST)

சிறைக்கு வெளியே தங்கியிருந்த சசிகலா - ரூபா அதிர்ச்சி தகவல்

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவும், இளவரசியும் சில நாட்கள் சிறைக்கு வெளியே தங்கியிருக்க வாய்ப்பிருக்கிறது என முன்னாள் டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.


 

 
சிறையில் சசிகலா மற்றும் இளவரசிக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் தொடர்பாக பல உண்மைகளை டிஐஜி ரூபா வெளியே கொண்டுவந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.  
 
சிறையில் ஆய்வு நடத்திய அவர் சசிகலாவிற்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்ததும், அவருக்கு அங்க சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருப்பதையும் ஆதாரத்துடன் வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக டி.ஜி.பி சத்தியநாராயணராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டதாகவும் அவர் புகர் கூறினார். இதனையடுத்து அவர் போக்குவரத்துதுறை அதிகாரியாக மாற்றப்பட்டார்.
 
இந்நிலையில், சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
 
சசிகலாவும், இளவரசியும் ஒரே அறையில் தங்கியிருந்தனர். சிறை விதிப்படி ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மட்டுமே வெளியிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி உண்டு. ஆனால், அவர்கள் இருவருகும் உடல்நிலை நன்றாக இருந்தபோதே வெளியில் இருந்து உணவு கொண்டு செல்லப்பட்டது. சிறைத்துறை அதிகாரி, வார்டன் ஆகியோருக்கு தெரியாமல் அங்கு எதுவும் செய்ய முட்யாது. இதற்கு பலர் உடந்தையாக இருந்திருக்க வாய்ப்புண்டு. இவை அனைத்தையும் வைத்து பார்க்கும் போது அவர்கள் சில நாட்கள் வெளியே தங்கியிருந்திருக்க வாய்ப்புண்டு. 
 
இது தெரிந்த பின்னரே நான் ஆய்வு நடத்தி அரசுக்கு தெரிவித்தேன். இதற்காக என்னை இடமாற்றம் செய்தார்கள். இது சகஜம்தான். அதை ஏற்றுக்கொண்டேன். 
 
சசிகலாவிற்கு அளிக்கப்பட்ட சலுகைகள் குறித்து விசாரணை நடந்து முடிந்துவிட்டது. ஆனாலும், அதன் அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. அதில் என்ன இருக்கிறது என தெரிந்துகொள்ள நானும் ஆர்வமாக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.