1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 6 ஜூலை 2024 (13:52 IST)

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையா? சசிகலா கண்டனம்..!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 5 படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 
இந்த நிலையில் சசிகலா தனது சமூக வலைதளத்தில் ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாமானியர்களின் பாதுகாப்பு என்னாவது என்று கேள்வி எழுப்பி பதிவு செய்துள்ளார். அவரது பதிவில் கூறியிருப்பதாவது:
 
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் ஆறு நபர்கள் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது. இது ஒரு திட்டமிட்ட கொலையாகத்தான் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் தமிழகத்தில் உளவுத்துறை முற்றிலும் தோல்வியடைந்திருப்பதைத்தான் காட்டுகிறது. 
 
ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லையென்றால், சாமானிய மக்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கப்போகிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை, இன்றைக்கு கொலை களமாக மாற்றியதுதான் திமுக தலைமையிலான அரசின் சாதனையா? தமிழக முதல்வரின் சட்டமன்ற தொகுதியாக விளங்கும் கொளத்தூரில், செம்பியம் காவல் நிலையம் அருகிலேயே இந்த கொலை சம்பவம் அரங்கேறியிருப்பதன் மூலம் இன்றைக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்து இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. இந்த  படுகொலை நடந்த இடத்தில் இருந்து இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கத்தி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகம் முழுவதும் நடைபெறும் சட்ட விரோத செயல்களை, போதை பொருள் கலாச்சாரத்தை, கள்ளச்சாராய விற்பனைகளை கண்டும் காணாமல் அலட்சியப்போக்குடன் இருக்கும் திமுக தலைமையிலான அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இந்த படுகொலைக்கு காரணமான உண்மை குற்றவாளிகளை உடனே கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும்  தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
 
Edited by Mahendran