பகுஜன் சமாஜ் கட்சியின் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. கமல்ஹாசன் இரங்கல்..!
பகுஜன் சமாஜ் கட்சியின் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவரது மறைவு பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பாகும்.
ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப் படையினரால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உள்பட பல அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நாம் தமிழர் கட்சியின் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்பட பல்வேறு கட்சியின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran