திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 21 மார்ச் 2018 (13:09 IST)

சென்னை பக்கம் வரக்கூடாது : சசிகலாவிற்கு விதிக்கப்பட்ட நிபந்தனை

கணவர் நடராஜன் மரணமடைந்ததை அடுத்து 15 நாட்கள் பரோலில் வெளிவந்துள்ளார் சசிகலா.

 
சசிகலாவின் கணவர் நடராஜன் நேற்று அதிகாலை மரணம் அடைந்த நிலையில் தனது கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள 15 நாட்கள் பரோல் வேண்டும் என்று சசிகலாவின் தரப்பில் விண்ணப்பம் வழங்கப்பட்டது. அதை சிறை நிர்வாகம் ஏற்று அவருக்கு 15 நாள் பரோல் வழங்கியது.   
 
நடராஜனின் இறுதிச்சடங்கு அவரின் சொந்த ஊரான தஞ்சாவூரில் இன்று காலை நடைபெறவுள்ளது. எனவே, பெங்களூரிலிருந்து காரின் மூலம் நேற்று மாலை தஞ்சாவூர் சென்றார் சசிகலா. அங்கு நடராஜனின் உடலை பார்த்து கதறி அழுதார். அவருக்கு அவரின் உறவினர்கள் ஆறுதல் கூறினர்.
 
உடல் நலப்பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்டிருந்த போது சசிகலா முதல் முறையாக பரோலில் வெளிவந்தார். தற்போது 2வது முறையாக அவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த முறை போலவே தற்போதும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது, யாரையும் சந்திக்கக் கூடாது என்கிற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
முக்கியமாக, இந்த 15 நாட்களும் தஞ்சாவூர் மாவட்டம் பரிசுத்தம் நகரிலுள்ள எண். 12 என்ற வீட்ட்டில் மட்டுமே தங்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதுதான் நடராஜனின் சொந்த ஊராகும். மேலும், அந்த வீடு அவரின் பூர்வீக வீடாகும். எனவே, அவர் சென்னைக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவரை சந்தித்து பேச சென்னையில் உள்ள அவரின் உறவினர்கள் தஞ்சாவூர் சென்று அவரை சந்திப்பார்கள் எனத் தெரிகிறது.