வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 3 ஜூலை 2017 (14:28 IST)

மறு சீராய்வு மனு ; 6 மாத ஜாமீன் ; தனது கட்டுப்பாட்டில் கட்சி : சசிகலா அதிரடி திட்டம்

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு எதிரான மறுசீராய்வு மனுவில் தனக்கு சாதகமாக தீர்ப்பு வரும் எனவும், அதன் மூலம் ஜாமீனில் வெளியே வந்து அதிமுக கட்சியை மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைக்கவும் சசிகலா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் உலா வருகிறது.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட தண்டனை பெற்று சசிகலா மற்றும் அவரின் உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் அக்ரஹார பரப்பன சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
அந்நிலையில்தான், அதிமுகவில் பல களோபரங்கள் அரங்கேறி வருகின்றன. ஏற்கனவே ஓ.பி.எஸ் அணியை சேர்ந்தவர்கள், எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இரு அணிகளும் இணைவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அதேபோல், சசிகலாவை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்ற கருத்தின் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும், தினகரன் ஆதரவாளர்களும் மோதிக்கொள்கிறார்கள். மறுபக்கம், எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது. 


 

 
ஆனால், எதற்கும் பதிலளிக்காமல் அமைதி காத்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில், ஆகஸ்டு 5ம் தேதிக்கு பின் என் நடவடிக்கைகளை பாருங்கள் என அதிரடி காட்டினார் டிடிவி. தினகரன். இதை எடப்பாடி அணியினர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது வேறு கதை.
 
இந்நிலையில்தான், தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார் சசிகலா. அவரோடு சேர்ந்து இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் வேட்பாளருக்கே ஆதரவு அளித்ததால், மறுசீராய்வு மனுவின் தீர்ப்பு தனக்கே சாதகமாக வரும் என சசிகலா தரப்பு கருதுகிறதாம். குறைந்தது 6 மாத காலம் ஜாமீன் கிடைத்தால் கூட, கட்சியில் உள்ள பிரச்சனைகளை களைந்து, கட்சியை மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட முடியும் என சசிகலா கருதுகிறாராம்.
 
ஆனால், தீர்ப்பு அவருக்கு சாதகமாக வருவதற்கு வாய்ப்பு இல்லை என எடப்பாடி தரப்பு தரப்பு நம்பிக்கையோடு இருப்பதாகவும் கூறப்படுகிறது.