புரட்சித்தாய் சின்னம்மாவின் புரட்சி பயணம்! - அதிர்ச்சியில் அதிமுக!
அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை தலை தூக்கியுள்ள நிலையில் சென்னையில் புரட்சி பயணம் மேற்கொள்ள உள்ளதாக சசிக்கலா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து அதிமுகவிற்குள் சர்ச்சை நிலவி வரும் நிலையில் நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடியது. ஆனால் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இரு தரப்பினர் இடையேயும் கூச்சல், குழப்பம் நிலவியதால் தொடங்கிய சில மணி நேரத்தில் முடிவடைந்தது.
அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என அதிமுக சபாநாயகர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குள்ளாக தற்போது ஓபிஎஸ் அணியினர் டெல்லிக்கு அவசர பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் ஏற்கனவே கட்சி பரபரப்பாக உள்ள நிலையில் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சசிக்கலா. கழக பொது செயலாளரின் முகாம் அலுவலகத்திலிருந்து வெளியிடுவதாக வெளியாகியுள்ள அந்த அறிக்கையில், புரட்சி தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் எண்ணங்களை தமிழக மக்களிடையே கொண்டு சேர்க்கும் புரட்சி பயணமாக இது நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் 26ம் தேதி தி.நகர் இல்லத்திலிருந்து புரட்சி பயணம் மேற்கொள்ளும் சசிக்கலா அங்கிருந்து கோயம்பேடு, பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி, குண்டலூர், கோரமங்கலம், ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
ஏற்கனவே கட்சியில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை நிலவி வரும் நிலையில் கட்சியின் பொதுசெயலாளர் என்ற பெயரிலேயே சசிகலா புரட்சி பயணத்தை அறிவித்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.