சமூக வலைதள காதல்; கணவனை கொன்று நாடகம்! – சேலத்தில் இளம்பெண் கைது!
சேலத்தில் சமூக வலைதளம் மூலம் ஏற்பட்ட காதலால் கணவனையே இளம்பெண் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஷாலினி. இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாக உறவினரான பிரபு என்பவருடன் திருமணம் ஆன நிலையில் ஒன்றரை வயது வயதில் குழந்தை ஒன்று உள்ளது. ஷாலினி விருப்பமின்றி பிரபுவை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், சமூக வலைதளம் மூலமாக ஷாலினிக்கு திருச்சியை சேர்ந்த காமராஜ் என்பவர் பழக்கமாகி இருவருக்கும் காதலானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமூக வலைதளத்தை ஷாலினி பயன்படுத்துவதை பிரபு கண்டித்ததாகவும் இதனால் தம்பதியர் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு பிரபு தூங்கி கொண்டிருக்கையில் தலையணையை வைத்து அமுக்கி கொன்ற ஷாலினி, உறவினர்களிடம் திருடர்கள் சிலர் பிரபுவை கொன்று விட்டதாக முன்னுக்கு பின் உளறியுள்ளார்.
இதுகுறித்து பிரபு பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்தபோது ஷாலினி உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார், அதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் திருச்சியை சேர்ந்த காமராஜையும் கைது செய்து இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.