புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2019 (16:05 IST)

ரோகிணிக்கு பதில் ராமர்: கலெக்டரை மாற்றி கணக்கு போடும் எடப்பாடி

சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணியை எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திடீரென பதவிமாற்றம் செய்து தமிழ்நாடு இசை பல்கலைகழக பதிவாளராக பதவி அமர்த்தி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் பல மாவட்ட கலெக்டர்கள் இருந்தாலும் அடிக்கடி சமூக வலைதளங்களில் ட்ரெண்டானவர் சேலம் கலெக்டர் ரோகிணி. சேலத்தின் முதல் இளம் பெண் கலெக்டரான இவர், இவரது செயல்பாடுகளால் பிரபலம் ஆனார். மனு கொடுக்க வரும் முதியோர்களின் அருகில் அன்பாக அமர்ந்து விசாரிப்பது, ஆசிரியர் பள்ளிக்கு வரவில்லையென்றால் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது, துப்புறவு பணிகளை மேற்கொள்வது என விக்ரமன் பட ஹீரோ போல் ஒரே நேரத்தில் பல பணிகளையும் செய்வார். அடிக்கடி இவரது அண்ணா போஸ் கை நீட்டிய போட்டோக்கள் இணையத்தில் கிண்டலாக நெட்டிசன்கள் பலர் பதிவிடுவது வழக்கம்.

முதல்வரின் மாவட்டமான சேலத்தின் கலெக்டராக இருக்கும் இவர் திமுக அனுதாபி என கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த பாலம் திறக்கும் விழாவில்கூட திமுக எம்.பி பார்த்திபன் உள்ளிட்ட சிலரை கலெக்டர் ரோகிணி அழைத்திருந்தது எடப்பாடிக்கு பிடிக்கவில்லையாம். மேலும் தற்போது பார்த்திபன் எம்.பியாக பதவியேற்ற நிலையில் அவரது புகார்களையும், மனுக்களையும் ரோகிணி உடனே பரிசீலிப்பதாகவும், அதிமுகவினர் கொடுத்தால் தட்டி கழிப்பதாகவும் கட்சி வட்டாரம் மேலிடத்திற்கு போட்டு கொடுத்ததாக தெரிகிறது.

ஆனாலும் கலெக்டர் ரோகிணி எட்டுவழிசாலை திட்டம் போன்றவற்றில் அரசாங்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டு நிலங்களை பறிமுதல் செய்ய பேச்சுவார்த்தை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. சில அரசியல் பிரமுகர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் “கலெக்டர் ரோகிணி திமுக, அதிமுக இரண்டு பக்கமும் சாயாமல் தனி ட்ராக்கில் போய் கொண்டிருக்கிறார். இதனால் அதிமுகவுக்கு நிறைய இடையூறுகள்” என்கிறார்கள்.

வேலூர் கலெக்டர் ராமன் திமுக செயலாளர் துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடத்தி மக்களவை தேர்தலையே தள்ளிவைக்க செய்தவர். அவரை சேலத்தின் கலெக்டராக ஆக்கினால் சில லாபங்கள் இருக்கும் என கணக்கு செய்தே அவருக்கு அந்த பதவியை கொடுத்திருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.