1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (17:39 IST)

ராம்குமாரை குற்றவாளி என்று கூற நீங்கள் என்ன நீதிபதியா? : எஸ்.வி.சேகருக்கு எகிறும் எதிர்ப்பு

ராம்குமாரை குற்றவாளி என்று கூற நீங்கள் என்ன நீதிபதியா? : எஸ்.வி.சேகருக்கு எகிறும் எதிர்ப்பு

ராம்குமார் பற்றி கருத்து தெரிவித்துள்ள எஸ்.வி.சேகருக்கு கடும் எதிர்ப்புகள் உருவாகி வருகிறது.


 

 
சுவாதி படுகொலை செய்யப்பட்ட போது, தமிழகத்தில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தார். தற்போது ராம்குமார் மரணத்தில் சாதி சாயம் பூசக்கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
 
சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் “ கடந்த 30 வருடமாக கட்டுக்குள் இருந்த ஜாதியம் தற்போது மீண்டும் தலைக் காட்ட தொடங்கியுள்ளது. அதுவும் முன்பை விட அதிக வீரியமாக வந்துள்ளது. குற்றவாளிகளை மக்கள் குற்றவாளிகளாக மட்டுமே பார்க்க வேண்டும்.
 
ராம்குமார் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி. அவரை அந்த அளவுக்குத்தான் பார்க்க வேண்டும். அவருக்கு சாதி சாயம் பூசக்கூடாது” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் அவரின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ராம்குமார் போலீசாரால் குற்றம் சாட்டப்பட்டவர்தான். கடைசி வரையில் அவர் விசாரணைக் கைதியாகத்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர்தான் குற்றவாளி என்று இன்னும் போலீசார் நீதிமன்றத்தில் நிரூபிக்கவில்லை. குற்றப்பத்திரிக்கையையும் போலீசார் தாக்கல் செய்யவில்லை. எனவே ராம்குமாரை குற்றவாளியாக மட்டுமே பார்க்கவேண்டும் என்று எஸ்.வி.சேகர் எப்படி கருத்து தெரிவிக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
மேலும், ராம்குமார்தான் குற்றவாளி என்று கூற எஸ்.வி.சேகர் என்ன நீதிபதியா? என்று சிலரும், பல்வேறு வழக்குகளில் பல முக்கிய அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவரையும் குற்றவாளிகள் என்று கூறும் தைரியம் எஸ்.வி.சேகருக்கு உள்ளதா என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சுவாதி கொலை நடந்தபோது, தமிழகத்தில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு இல்லை இவர்தான் சாதியை இழுத்தார். தற்போது ராம்குமாரை குற்றவாளி என்று கூறுவதிலும் சாதிய பார்வையே தெரிகிறது. ஆனால், சாதி சாயம் பூசக்கூடாது என்று இவரே கூறுகிறார். என்று கொதிக்கின்றனர் நெட்டிசன்கள்..