திருப்பூரில் பிடிபட்ட ரூ.570 கோடி விவகாரம் தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் பெற்ற தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மே மாதம் நடைபெற்ற போது, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடி பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பணம் பாரத ஸ்டேட் வங்கி கிளையிலிருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கிளைக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்பட்டது. அதன்பின், அந்த பணம் அந்த வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின் தற்போது அந்த விவகாரத்தை சிபிஐ போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் அந்த பணம் குறித்து தகவல் உரிமை சட்டத்தின் கீழ் முழு விவரங்களையும் தெரிவிக்கும்படி, நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளரும், வழக்கறிஞருமான பிரம்மா திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதுபற்றி அவர் முன்னணி நாளிதழின் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ரூ.570 கோடி விவகாரம் தொடர்பாக முன்னுக்கு பின் தகவல் வந்ததால், திருப்பூர் கலெக்டரிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகளை எழுப்பினேன். ஆனால் 30 நாட்கள் ஆகியும் எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. அதன்பின் தமிழ்நாடு தகவல் ஆணையருக்கு மேல்முறையீட்டு மனு கொடுத்தேன். அதற்கு, திருப்பூர் ஆர்.டி.ஓவிடம் கேட்டுப் பெறுமாறு பதில் கூறினர். அதன்பின் ஆர்.டி.ஓவை சந்தித்து எனது கேள்விகளை எழுப்பினேன்.
ஆனால், ஒரு சில கேள்விகளுக்கு மட்டுமே அவர் பதில் கூறினார். மேலும், ஒரு மணி நேரம் ஓடக்கூடிய சி.டி.யும் கொடுக்கப்பட்டது.
அந்த சி.டி. பதிவில். ஒரு அதிகாரி அந்த வாகனங்களை பிடித்து சோதனை செய்வதும், அதன்பின் அவர் அதை திருப்பி அனுப்புவதும், மற்றொரு இடத்தில் வேறொரு அதிகாரி, அந்த 3 கண்டெய்னர் லாரிகளையும் மடக்கி பிடிப்பதும் பதிவாகியுள்ளது.
மேலும், கலெக்டர், காவல் அதிகரிகள் மற்றும் ஆர்.டி.ஓ ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பணத்தை பார்வையிடுவதும் பதிவாகியுள்ளது. அதன்பின் லாரி டிரைவர்கள் மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பாக வந்த காவல் அதிகாரிகளிடம் முறையான ஆவணங்களை கேட்டு விசாரிப்பதும் பதிவாகியுள்ளது.
பிடிபட்ட 3 லாரிகளில் ஒரு பதிவு எண் டெல்லியில் பதிவானது. 2 லாரிகளின் பதிவு எண் ஆந்திர மாநிலத்திலும் பதிவானது. தற்போது அந்த பணம் பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு சொந்தமானது என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், பணத்தை கொண்டு வந்த 3 கண்டெய்னர் லாரிகளின் உரிமையாளர் யார்? லாரி டிரைவர்கள் யார்? லாரி எங்கிருந்து புறப்பட்டது என்ற டிரிப் சீட், லாரிகளுடைய ஆர்.சி.புக் மற்றும் இதர ஆவணங்கள் பற்றி கேள்வி எழுப்பியிருந்தேன். ஆனால் இதுவரை அதற்கு பதில் இல்லை.
லாரிகளில் வந்த வங்கி அதிகாரிகளின் அடையாள அட்டை முறையாக இல்லை. ரூ.570 கோடி பணத்தை வருவாய் துறை அதிகாரிகள் பிடித்து என்ணியதற்கான விபரங்களும் இல்லை.
எனவே இதுகுறித்து பதில் அளிக்குமாறு மீண்டும் தமிழ்நாடு தகவல் ஆணையருக்கு மனு அனுப்ப உள்ளேன். அதிலும் முறையான தகவல் கிடைக்கவில்லையெனில், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்”
என்று அவர் கூறியுள்ளார்.