ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2019 (14:10 IST)

இனி தவறுகள் செய்யமாட்டோம் - உறுதிமொழி எடுத்த ரூட் தலைகள் !

சாலைகளில் அரிவாளோடு சுத்திய மாணவர்கள் பிரச்சனையை அடுத்து ரூட் தலைகள் இனி எந்த ஒழுக்கமற்ற செயல்களிலும் ஈடுபடமாட்டோம் என உறுதிமொழி அளித்துள்ளனர்.

சென்னைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு ரூட்டுக்கும் ஒரு ரூட் தல எனும் நபரைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். குறிப்பிட்ட பஸ்களில் வரும் அந்த ’ரூட் தல’கள் பஸ்டே கொண்டாடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம். அப்போது பயணிகளுக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கும் தொல்லைக் கொடுப்பது போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் சென்னையில் சில தினங்களுக்கும் முன் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், 7 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருள்மொழிச்செல்வன் ,பட்டா கத்தியுடன்  மோதலில் ஈடுபட்ட 2 மாணவர்களை இடைநீக்க  செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த சூழலில் இந்த ரூட் தலப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காவல் துறையினர் நேற்று பச்சையப்பன், மாநில, நியூ கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாகச் சென்னையில் 90 ரூட் தலைகள் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அவர்களை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இன்று அம்பத்தூர் காவல் துணை ஆணையர் ஈஸ்வரன் முன்னிலையில் 30க்கும் மேற்பட்ட ரூட் தலைகள், ”இனி எந்த ஒழுக்கமற்ற செயல்களிலும் ஈடுமாட்டோம். பெற்றோருக்கு நல்ல பெயரை வாங்கித் தருவோம் தவறினால் சட்டப்படியான நடவடிக்கைக்குக் கட்டுப்படுவோம் என்று உறுதியளிக்கிறோம்’ என உறுதிமொழி அளித்துள்ளனர்.