வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 7 மே 2018 (13:49 IST)

ரவுடி ராக்கெட் ராஜா சென்னையில் கைது - பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

பல வழக்குகளில் தொடர்புள்ளவரும், போலீசாரால் தேடப்பட்டு வந்தவருமான ரவுடி ராக்கெட் ராஜா இன்று சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகில் உள்ள ஆணைக்குடி கிராமத்தை சேர்ந்தவர்தான் இந்த ராஜா. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அவரின் நண்பர் கராத்தே செல்வின் கொலைக்கு பழிவாங்கவே இவர் ரவுடியாக மாறினார் எனக் கூறப்படுகிறது. இவர் மீது பல கொலை வழக்குகள் உள்ளது. குறிப்பாக, கராத்தே செல்வின் கொலை வழக்கில் தொடர்புடைய கட்டதுரையை சென்னை எழும்பூரில் ராக்கெட் ராஜா சுற்றுக்கொன்றார். மேலும், கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தில் என பல வழக்குகள் நெல்லை மற்றும் தூத்துகுடி மாவட்டங்கள் நிலுவையில் உள்ளது.
 
ராக்கெட் வேகத்தில் செயல்பட்டு எதிரிகளை சுட்டுக்கொல்வதில் ராஜா கில்லாடிஎன்பதால் இவரை ராக்கெட் ராஜா என இவரின் ரவுடி நண்பர்கள் அழைத்து வருகின்றனர். போலீசாரால் தேடப்பட்டு வந்த ராக்கெட் ராஜா, சென்னை அண்ணாசாலையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருப்பது சென்னை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 
எனவே, இன்று அதிகாலை அவர் தங்கியிருந்த அறைக்கு சென்ற போலீசார், ராக்கெட் ராஜா மற்றும் அவருடன் இருந்த 4 ரவுடிகளையும் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி, அரிவாள், கத்தி உள்ளிட்ட பல ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
 
அதன் பின், அவர்களை விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவரை கொலை செய்யும் நோக்கத்தில் அவர் சென்னையில் பதுங்கியிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.