சிறப்பு பேருந்தும் வேண்டாம், மெட்ரோவும் வேண்டாம்.. மின்சார ரயில் தான் எங்களுக்கு செளகரியம்: பயணிகள்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் தண்டவாள பராமரிப்பு பணிகள், புறநகர் மின்சார ரயில் சேவையை கடுமையாக பாதித்துள்ளன. குறிப்பாக, கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ரயில் சேவைகள் 115 ஆக குறைக்கப்பட்டிருப்பது நாள்தோறும் பயணிக்கும் லட்சக்கணக்கான மக்களை இன்னலுக்கு உள்ளாக்கியுள்ளது.
எழும்பூர் மற்றும் சேத்துப்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே மின்சார ரயில்கள் சுமார் 30 நிமிடங்கள் வரை காத்திருந்து செல்வதால், அலுவலகம் மற்றும் கல்வி நிலையங்களுக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
பயணிகளின் சிரமத்தை குறைக்க தெற்கு ரயில்வே சார்பில் தாம்பரம் மற்றும் கடற்கரை நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், சாலை போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண நேரம் அதிகரிப்பு காரணமாக பயணிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை. அதேபோல், மெட்ரோ ரயில்களில் வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணம் மற்றும் அடிக்கடி மாற வேண்டிய கட்டாயம் காரணமாக, மின்சார ரயில் பயணிகள் அதையும் ஒரு சிறந்த மாற்றாக கருதவில்லை.
கூட்ட நெரிசலை சமாளிக்க ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்கும் முயற்சியும் தொழில்நுட்ப காரணங்களால் சவாலாக உள்ளது. ரயில்வே நிர்வாகம் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்தாலும், பூங்கா நகர், கோட்டை மற்றும் தாம்பரம் நிலையங்களில் அலைமோதும் கூட்டமே உண்மை நிலையை சொல்லுகிறது.
இந்த பணிகளை விரைந்து முடித்து, சேவையைச் சீரமைப்பதே நிரந்தரத் தீர்வாக அமையும் எனப் பயணிகள் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Edited by Siva