ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்த ஆதாரம் உறுதியானது: விஜயபாஸ்கர் மீது வேகமெடுக்கும் விசாரணை!
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்த ஆதாரம் உறுதியானது: விஜயபாஸ்கர் மீது வேகமெடுக்கும் விசாரணை!
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது விசாரணை தீவிரமாகி வருவதாகவும், ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது குறித்த ஆதாரம் உறுதியாகி உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அராஜகமாக அங்கு நுழைந்த தமிழக சிறப்பு டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் அப்பட்டமாக சில ஆவணங்களை டிரைவர் மூலம் வெளியே வீசியது தெரிந்தது.
இதனையடுத்து அந்த ஆவணங்களில் இருந்தது என்ன, அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்ற குழப்பம் நீடித்து வந்தது. அதுபோக கட்டுக்கட்டாக ஆவணங்கள் விஜயபாஸ்கரின் வீட்டில் இருந்து கைப்பற்றினர் வருமான வரித்துறையினர். அவை அனைத்திலும் விஜயபாஸ்கர் கையெழுத்து போட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விசாரணையின் போதே விஜயபாஸ்கர் பணப்பட்டுவாடா செய்ததை ஒப்புக்கொண்டதாக வருமான வரித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தளவாய் சுந்தரம் மூலம் வெளியே வீசிய ஆவணம் ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணம் என கூறப்படுகிறது.
அதனை ஏற்கனவே வருமான வரித்துறையினர் செல்போனில் படம்பிடித்து வைத்திருந்தனர். ஆனால் இவை எதுவும் தெரியாமல் அந்த ஆவனங்களை விஜயபாஸ்கரின் வீட்டிலிருந்தவர்கள் மறைத்து எடுத்து வெளியியில் ஓடியுள்ளனர். வருமான வரித்துறையினர் படம்பிடித்த அனைத்து ஆவணங்களையும் துறை அதிகாரிகளுக்கு உடனடியாக அனுப்பியுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் மூலம் ஆர்.கே.நகரில் அதிமுக அம்மா அணி பணப்பட்டுவாடா செய்தது உறுதியாகியுள்ளதாகவும், அதில் விஜயபாஸ்கரின் பங்கு பெருமளவு உள்ளதால் அவர் மீதான விசாரணை வேகமெடுக்க தொடங்கியுள்ளனர்.