ஆர்கே நகர் கள நிலவரம்: குக்கரில் விசில் சத்தம் அதிகமாகவே கேட்கிறது!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெறப்போவது யார்? என்பது தான் தற்போதைய தமிழக அரசியலில் ஹாட் டாப்பிக். ஓகி புயலை கூட கவனிக்காமல் ஆர்கே நகரை நன்றாக கவனித்து வருகிறது ஆளும் தரப்பு.
ஆர்கே நகர் தேர்தலில் பலர் நின்றாலும் மூன்று பேருக்கு மட்டும் தான் போட்டி நிலவுகிறது. திமுக வேட்பாளர் மருது கணேஷ், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் மற்றும் தினகரன் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மூவரும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் பரபரப்பாக களத்தில் சுழன்று வருகின்றனர்.
இந்த ஆர்கே நகர் ரேஸில் தினகரன் மற்ற வேட்பாளர்களை விட சற்று முன்னணியில் இருப்பதாகவே கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. தொப்பி சின்னம் கிடைக்காவிட்டாலும், கிடைத்த குக்கர் சின்னத்தை தினகரன் தரப்பு நன்றாகவே பயன்படுத்துகிறது.
ஆர்கே நகரில் திரும்பும் இடமெல்லாம் குக்கர் தான் தெரிகின்றன. இந்த பிரச்சாரத்துக்கு தொகுதியில் உள்ளவர்களைத்தான் தினகரன் பயன்படுத்துகிறார். வெளியூர் ஆட்கள் யாரும் வருவதில்லை, போதுமான ஆட்கள் தொகுதியிலேயே தினகரனுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. பெண்கள் கும்பல் கும்பலாக குக்கரை தலையில் தூக்கிக்கொண்டு வீடு வீடாக தினகரனுக்கு ஆதரவாக ஓட்டு கேட்கின்றனர். தேர்தல் முடிந்ததும் அந்த குக்கர்கள் அவர்களுக்கு தான் என பேசப்படுகிறது.
தினகரனுக்கு ஆதரவாக பெண்களின் அசத்தல் பிரச்சாத்தை ஆர்கே நகரில் பார்க்க முடிகிறது. தினகரனுக்கு இந்த தேர்தல் வாழ்வா சாவா பிரச்சனை என்பதால் வாக்காளர்களை தேர்தல் ஆணையத்திற்கு தெரியாமல் கவனிக்க வேண்டும் என பல திட்டங்களை வைத்துள்ளனர். ஏற்கனவே 85 சதவீதம் வேட்பாளர்களுக்கு 4000 ரூபாய் வீதம் கொடுத்துள்ளனர். இந்தமுறை கடைசி நேரத்தில் வெயிட்டாக கவனிக்க உள்ளார்களாம். இதனால் ஆர்கே நகர் தொகுதியில் தினகரனின் குக்கர் விசில் சத்தம் அதிகமாகவே கேட்கிறது.
எடப்பாடிக்கு எந்த அளவுக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது என்பதை எடைபோடும் தேர்தலாக இந்த ஆர்கே நகர் தேர்தல் உள்ளது. இதனால் பணம், உள்ளிட்ட பரிசு பொருட்கள் மக்களுக்கு சரியாக போய் சேர்கிறதா என்பதை ஒவ்வொரு அமைச்சர்களும் கவனிக்க வேண்டும் என எடப்பாடி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மதுசூதனனுக்காக களத்தில் இறங்கி ஓட்டு கேட்பது வெளியூர் ஆட்கள்தான். அந்தப் பகுதியை சேர்ந்தவர்களை அதிகம் பிரச்சாரத்தில் பார்க்க முடியவில்லை.
திமுகவை பொறுத்தவரையில் ஆர்கே நகரில் தேட வேண்டி இருக்கிறது. வேட்பாளர் மருதுகணேஷ் மட்டும் சிலருடன் சேர்ந்து தொகுதியில் சுற்றிக் கொண்டு இருக்கிறார். திமுகவின் கூட்டணியில் இருப்பதாக சொல்பவர்கள் என யாரையும் ஆர்கே நகரில் பார்க்க முடியவில்லை. ஓட்டுக்கு பணம் கொடுக்கலாமா? கொடுப்பார்களா என எந்த கேள்விக்கும் திமுக தலைமையில் இருந்து பதில் இல்லையாம். ஸ்டாலினை பொறுத்தவரை நமக்கு மக்கள் ஆதரவு இருக்கு, அதனால பணம் கொடுத்து ஜெயிக்க தேவை இல்லை. நாமதான் ஜெயிப்போம்' என சொல்லி வருகிறாராம்.