சென்னை பரங்கிமலையில் ஆக்ரமிக்கப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், செயின்ட் தாமஸ் மவுண்ட் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 41,952 சதுர அடி நிலம் இன்று மாவட்ட நிர்வாகத்தால் மீட்கப்பட்டுள்ளது.
இதுபற்றி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் மீட்பு செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், செயின்ட் தாமஸ் மவுண்ட் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 41,952 சதுர அடி நிலம் இன்று மாவட்ட நிர்வாகத்தால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த நிலமானது வருவாய் பதிவேட்டில் காலம் கடந்த குத்தகை நிலம் எனத் தாக்கலாகியுள்ளது. இதனை கோயில் பயன்பாட்டிற்கு தற்காலிகமாகப் பயன்படுத்திக்கொள்ள காசிவிஸ்வநாதர் தேவஸ்தானத்திற்கு தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பின்னர் இவ்விடம் கோயில் பயன்பாட்டிற்கு பயன்படாமல் பிற நபர்களால் வன்னியர் சங்கக் கட்டிடம் சங்கக் கட்டிடம் என்ற பெயரில் கட்டிடம் கட்டி ஆக்கிரமிக்கப்பட்டதோடு அதன் மூலம் அரசிற்கு குத்தகை தொகை எதுவும் செலுத்தப்படாமலும் இருந்து வருகிறது.
எனவே, மேற்படி அரசு நிலத்தில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளவற்றை அகற்றிட தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905 பிரிவு 7 மற்றும் 6- ஆகியவற்றின் கீழான அறிவிக்கை பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் 28-11-2022 மற்றும் 6-3-2023 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்டன. ஆக்கிரம்பு செய்தவர்கள் மேற்படி ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளாத நிலையில் வருவாய் நிலையாணை எண்.29-ன் பிரிவு 13-ன் படி, மேற்படி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுமார் ரூபாய் 100 கோடி மதிப்புள்ள. சுமார் ஒரு ஏக்கர் நிலத்தினை பல்லாவரம் வட்டாட்சியர் மூலம் 18-8-2023 அன்று அரசின் வசம் கொண்டு வரும் பொருட்டு பூட்டி சீலிட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இவ்விடம் தற்பொழுது சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்கு பயன்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.