எந்த விசாரணைக்கும் தயார்..! எனக்கு எந்த தொடர்பும் இல்லை..!! இயக்குநர் அமீர்...
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த திமுக முன்னாள் நிர்வாகியும், சினிமா தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை கடந்த 9 ம் தேதி டெல்லியில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் நடைபெற்ற விசாரணையில் ஜாபர் சாதிக் தயாரிக்கும் இறைவன் மிகப் பெரியவன் என்ற திரைப்படத்திற்காக இயக்குநர் அமீருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசி அதற்கான முன்பணமாக 28 லட்சம் ரூபாயை அமீர், ஜாபர் சாதிக்கிடமிருந்து பெற்றதும், இந்த படத்தின் படப்பிடிப்பு 70% முடிந்த நிலையில் தற்பொழுது மீதமுள்ள படம் எடுக்க முடியாமல் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
மேலும் கடந்த 2014 முதல் ஜாபர் சாதிக்கும், இயக்குநர் அமீரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இயக்குநர் அமீர் உட்பட 3 நபர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். அதைத்தொடர்ந்து கடந்த 3ம் தேதி டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் இயக்குநர் அமீர் விசாரணைக்கு ஆஜரானார்.?அவரிடம் சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக சென்னையில் ஜாபர் சாதிக் மற்றும் இயக்குநர் அமீருக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் இது தொடர்பாக அமீர், சோதனையின் போது சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக தெரிவித்தார்.
எந்த விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன் என்றே தொடக்க காலத்தில் இருந்து சொல்லி வருகிறேன் என்றும் சமூக வலைத்தளங்களில் என் மீது சுமத்தப்படும் எந்த குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அதை நிரூபிப்பேன் என்றும் இயக்குனர் அமீர் தெரிவித்தார்.