வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (18:24 IST)

ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.342 கோடி; கொள்ளை போனது எவ்வளவு?

சேலத்திலிருந்து சென்னை புறப்பட்ட ரயிலில் கொண்டு செல்லப்பட்ட, ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான கோடிக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சேலத்திலிருந்து நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்ட ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான ரூ.342 கோடி பணம், பெட்டிகளில் அடைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. இதற்காக ஒரு தனி பெட்டியே ரிசர்வ் செய்யப்பட்டிருந்தது. 
 
பொதுமக்களிடம் இருந்து பழைய நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு புதிய நோட்டுகளை கொடுக்கும். அப்படி பெறப்பட்ட பழைய நோட்டுகள்தான் அந்த ரயிலில் கொண்டு செல்லப்பட்டது.
 
சென்னை எழும்புரில், அந்த பணத்தை எடுத்துச் செல்ல அதிகாரிகள் சென்ற போது, ரயிலில் மேற்கூரையில் ஓட்டையிட்டு அங்கிருந்த பெட்டிகளை உடைத்து அதிலிருந்து பல கோடி பணம் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
 
அதன்பின் ரயில்வே போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகிறார்கள். இத்தனை கோடி பணத்தை கொண்டு வரும்போது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்யவில்லை. இதுவே கொள்ளையர்களுக்கு வசதியாக போய்விட்டது என்று தெரியவந்துள்ளது.
 
மேலும், இந்த ரயில் விருதாசலத்தில் ரயிலின் இன்ஜினை மாற்றுவதற்காக ஒன்றரை மணிநேரம் நிறுத்தப்பட்டுள்ளது. அங்குதான் இந்த கொள்ளை நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று போலீசார் கருதுகிறார்கள்.
 
பணம் இருந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் சரியாக ஒருவர் உள்ளே நுழையும் அளவுக்கு ஓட்டையிடப்பட்டு பல கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு என்ன அதிகாரிகள் கணக்கிட்டு செய்து வருகின்றனர்.
 
ஆனால், கொள்ளையர்கள் இந்த திருட்டில் ஈடுபடும்போது, ரயில் நிலையத்தில் இருந்த ஒருவர் கூட கண்கானிக்கவில்லை என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. திறைமையான கொள்ளையர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.