செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 நவம்பர் 2020 (08:27 IST)

பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க அரசாணையா? –அமைச்சர் உதயகுமார் சூசகம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க உள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை தொடர்ந்து ஆளுனர் ஒப்புதலும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பான தீர்மானமும் ஆளுனர் ஒப்புதலுக்காக கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் வுரைவில் அதற்கு ஆளுனர் ஒப்புதல் வழங்க வேண்டுமென்றும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ”பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரும் விடுதலை ஆக வேண்டுமென்று மற்றவர்களை போலவே நாங்களும் ஆவலாக காத்திருக்கிறோம். இட ஒதுக்கீட்டில் முடிவு எடுத்தது போல எழுவர் விடுதலை குறித்தும் முடிவை முதல்வர் விரைவில் அறிவிப்பார்” என கூறியுள்ளார்.
இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுனர் ஒப்புதல் தாமதம் ஆனதால் உடனடியாக நிறைவேற்ற அரசாணை வெளியிட்டது போல எழுவர் விடுதலையிலும் அரசாணை பிறப்பிக்க திட்டம் உள்ளதா என அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.