ஸ்டாலினுக்கு என்றைக்கும் பலாப்பழம் கிடைக்காது: கலாய்க்கும் அமைச்சர்

Arun Prasath| Last Updated: புதன், 9 அக்டோபர் 2019 (12:02 IST)
நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் சட்டமன்ற  இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர் சார்பாக நாங்குநேரியில் பிரச்சாரம் செய்த வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஸ்டாலினை குறித்து கேலியாக பேசியுள்ளார்.

வருகிற 21 ஆம் தேதி நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக, திமுக, காங்கிரஸ், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் களமிறங்கியுள்ளன.

 நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பாக ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தலைவர் முக ஸ்டாலின் நாங்குநேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதில் தொகுதி மக்களுடன் கலந்துரையாடிய அவர், கடந்த திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நல திட்டங்கள் குறித்து பேசினார், பின்பு கை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறினார்.

இதனை தொடர்ந்து நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து பேசிய வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ”ஆட்சி மாற்றம் என்னும் பலாப்பலத்தை காட்டி தொண்டர்களை ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார். ஆனால், அவருக்கு அந்த பலாப்பழம் என்றைக்கும் கிடைக்காது” என கேலி செய்தார். மேலும், ஸ்டாலின் இதுவரை ஒரு லட்சத்து பதினோறாயிரம் முறை ஆட்சிக்கு வந்துவிடுவோம் என சொல்லிவிட்டார், ஆனால் ஸ்டாலின் என்றைக்கும் ஆட்சிக்கு வரமாட்டார் என கூறியுள்ளார்.

நாங்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுகவுக்கு ஆட்சி மாற்றத்திற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. அதிமுகவிற்கு ஆட்சியின் மீதான மக்களின் நம்பிக்கைக்கான பலபரிட்சையாக பார்க்கப்படுகிறது. மேலும் அதிமுகவிற்கு பாஜக வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. ஆதலால் இந்த இடைத்தேர்தல் சூடுபிடிக்கும் நிகழ்வாக அமையப்போவதில் எந்த சந்தேகமும் இல்லை.

 இதில் மேலும் படிக்கவும் :