ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 24 செப்டம்பர் 2018 (19:04 IST)

கருணாநிதியை போல் ராவணன் ஒன்றும் திராவிடன் அல்ல: சு.சுவாமி சர்ச்சை பேச்சு

ராவணன் ஒன்றும் கருணாநிதியைப் போல் திராவிடன் இல்லை என்றும் ஆரியர்கள் தொலைதூரத்தில் இருந்து வந்தவர்கள் என்ற கூற்று ஆங்கிலேயர்கள் சொன்ன பொய் எனவும் சுப்ரமணியன் சுவாமி சர்ச்சைக் கருத்தை வெளியிட்டுள்ளார்.


சர்ச்சையானப் பேச்சுகளுக்கு சொந்தகாரர் பா.ஜ.க. எம்.பி சுப்ரமணியன் சுவாமி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழர்களைப் பொறுக்கிகள் என்று கூறி சர்ச்சையைக் கிளப்பினார். தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

கோவாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு இந்திய கலாச்சாரப் பாரம்பரியமும் அதன் முக்கியத்துவமும் என்ற தலைப்பில் பேசிய அவர் ராவணன் ஒன்றும் கருணாநிதியைப் போல திராவிடன் இல்லை; அவன் பிறந்தது இலங்கையில் அல்ல, வட இந்தியாவில் உள்ள நொய்டாவில்தான் என்றும் உண்மைக்குப் புறம்பான கருத்தைக் கூறியுள்ளார்.

’நொய்டாவுக்கு அருகில் உள்ள பிஸ்ராக் எனும் கிராமத்தில் பிறந்த ராவணன்  ஒரு பிராமணன்; அவன் வேதங்களை நன்கு கற்றுணர்ந்தவன்; மேலும் கடுமையான தவத்தின் மூலம் சிவனின் அருளைப் பெற்றே இலங்கைக்கு சென்று போர்புரிந்து இலங்கையின் அரசனானான். மறைந்த திமுக தலைவர் தன்னை ராவணன் என்று நினைத்துக் கொண்டாரென்றும் அதனால்தான் எதை சொன்னாலும் அதை அவர் ஏற்கமாட்டார் என்றும் கூறியுள்ளார்.

’வட இந்தியா மற்றும் தென் இந்தியாவிற்கு எதிரான ஆரிய திராவிட பிரிவு என்பது ஆங்கிலேயர்களால் திட்டமிட்டு பரப்பப்பட்ட ஒன்று; ஆரியர்களாகிய நாங்கள் எங்கோ வெகு தொலைவில் இருந்து வந்தவர்கள் இல்லை. நாம் எல்லோரும் ஒரே இன மக்கள்; இந்த கருத்துகள் யாவும் ஆங்கிலேயர்களால் நம்மீது ஏற்றப்பட்டவை. இக்கருத்துகள் நம் பாடப்புத்தகத்தின் வாயிலாக கிறித்துவ மதகுருமார்களால் நமக்குக் கற்பிக்கப்பட்டவை. நாமும் அதை காலப்போக்கில் ஏற்றுக்கொண்டு விட்டோம்’ என்றும் கூறியுள்ளார்.