பாமக-வில் சமீபமாக ராமதாஸுக்கும், அன்புமணி ராமதாஸுக்கும் இடையே எழுந்துள்ள மோதல் கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
டாக்டர் ராமதாஸால் உருவாக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி, கடந்த சில தசாப்தங்களில் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க வலுவான மாநில கட்சியாக தொடர்ந்து வருகிறது. தற்போது பாமகவின் தலைவராக ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே முரண்பாடு அதிகரித்து வருகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதே ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பிய நிலையில், அன்புமணி ராமதாஸின் பிடிவாதம் காரணமாக பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில், தனது பேரன் முகுந்தனை பாமக இளைஞரணி தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார்.
அதற்கு மேடையிலேயே அன்புமணி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு எழுந்தது. இதனால் இருவர் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாட்டை சமாதானம் செய்து வைக்க பாமக முக்கிய பிரமுகர்கள் கூடி பேசி வருகின்றனர். ஆனால் முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமிக்க கூடாது என்று அன்புமணி விடாப்பிடியாக இருப்பதாக பேசிக் கொள்ளப்படுகிறது. அதேசமயம் பாமகவில் இதுபோன்ற முரண்பாடுகள், விவாதங்கள் நடப்பது இயல்பான ஒன்றுதான் என அன்புமணியே கூறியுள்ளார்.
இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் செயல்படுவார் என திட்டவட்டமாக அறிவித்துள்ளார் கட்சி நிறுவனர் ராமதாஸ். இதற்கு அன்புமணி ராமதாஸ் என்ன எதிர்வினையாற்ற போகிறார் என்று பாமகவினர் குழப்பத்தில் உள்ளனர்.
Edit by Prasanth.K